நோ நாய்ஸ் பிளீஸ்

’ஜுஜ்ஜூ…. புஜ்ஜிம்மா…’ என்றெல்லாம் நாயைக் கொஞ்சுகிற ஆசாமிகளைக் கண்டால் எனக்கு எரியும்.

 இது பரவாயில்லை. ஆர்.பி.எம். ராவ் என்று ஒரு நண்பர் இருந்தார் வேலூரில். அவர் வீட்டுக்குப் போனால் அழுக்கு லுங்கியோடு தரையில் உட்கார்ந்து வர்க்கி தின்று கொண்டிருப்பார். அவர் நாய் சோஃபாவில் உட்கார்ந்து டைம்ஸ் ஆஃப் இண்டியா பார்த்துக் கொண்டிருக்கும்.

“அசோக், அண்ணாவுக்கு உக்கார இடம் குடு” என்பார்.

அது எழுந்து கொஞ்சம் நகர்ந்து நிற்கும். உட்கார்ந்த நொடியிலிருந்து தொடைக் கறியை லாவப் போகிறமாதிரி என்னையே பார்த்துக் கொண்டிருக்கும். ஐஸ் கட்டிமேல் உட்கார வைக்கப்பட்ட ஆப்பிரிக்காக்காரன் மாதிரி அசவுகர்யமாக உட்கார்ந்து கொண்டிருப்பேன். கொஞ்சம் அப்படி இப்படி அசைந்தாலும் முன்னங்கால் இரண்டையும் தொடைமேல் தூக்கி வைத்துக்கொண்டு ‘அஹ்ஹ்ஹ்ஹ்….அஹ்ஹ்ஹ்ஹ்ஹ்’ என்று அப்னா தேஷ் பாட்டில் ஆர்.டி.பர்மன் மாதிரி சப்தம் செய்யும்.

எனக்கு சப்த நாடியும் ஒடுங்கி பேதியாகும் போல ஆகிவிடும்.

இதைப் பார்த்து மிஸ்டர் பீன் காமெடி பார்த்த மாதிரி அந்த வீட்டுக்காரர்கள் சிரிப்பார்கள்.

“ஒண்ணும் பண்ணமாட்டான்” என்று வாக்குறுதி தருவார்கள். இதைவிட வேறே ஏதாவது கூடப் பண்ணும் போலிருக்கிறதே என்கிற திகிலைத்தான் அந்த வாக்குறுதி கொடுக்கும்.

நாய் கொஞ்சம் கவனக் குறைவாக இருக்கிற சமயமாகப் பார்த்து, “அப்ப நான் வரட்டுமா” என்று எழுந்தாலும்

“காப்பி சாப்டுட்டுப் போங்க” என்று தடுப்பார்கள்.

’காப்பியாவது பீப்பியாவது’ என்று ஓடிவந்து விடுவேன்.

உலகத்திலேயே அதிகமான தெருநாய்கள் இருக்கிற தெரு இப்போது நாங்கள் இருப்பதுதான். தினமும் ஆட்டோவிலும் லாரியிலும் அடிபட்டு செத்துப் போனவை நீங்கலாக சுமார் எண்பத்தேழு நாய்கள் இருக்கின்றன. நாய்பிடிக்க கார்ப்பரேஷன் வண்டி அனுப்புவதாக இருந்தால் இருபத்தைந்தடி கண்டைனர் லாரி கூடப் போதாது. கேட்டை என்னதான் சாத்தி வைத்தாலும் காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து வந்து புதுப்புது இடங்களில் ஆய் போய் விடுகின்றன. அதைத் திங்காதே மலச்சிக்கல் வந்துடும், இதைத் திங்காதே மலச்சிக்கல் வந்துடும் என்கிறோம். இந்த நாய்களுக்கு மலச்சிக்கல் வந்து தொலையாதோ!

ஆக்ரோஷக் குரைப்பு, நுழைநரித்தனமான ஊளை, அழுகை, கேள்வி கேட்கிற பாணியில் ‘லொள்’ளிவிட்டு பதிலுக்குக் காத்திருக்கும் செவிட்செல்வங்கள் என்று ராத்திரி பூரா டார்ச்சர். நாய் அழுதால் அந்தத் தெருவில் சாவு நிகழும் என்பார்கள். அது நிஜமென்றால் எங்கள் தெருவில் நியாயத்துக்கு இப்போது நாய்கள் மட்டும்தான் இருக்கவேண்டும்.

எங்கள் அண்டை வீட்டுக்காரர் ஒருத்தர் வளர்க்கும் பெட்டை நாய்க்காக ஏகப்பட்ட ஸ்திரீ லோல் நாய்கள் வட்டமிடுகின்றன. அந்த நாயின் கள்ளக் காதலுக்குப் பிறக்கும் குட்டிகள் அட்வான்ஸ் புக்கிங் ஆகிவிடும்.

நாய் வளர்க்கிற ஆசை எனக்கும் சின்ன வயசில் இருந்திருக்கிறது. ஆனால், எனக்கும் நாய்களுக்கும் சின்ன வயசிலிருந்தே வேவ்லெங்த் மேட்ச் ஆகிறதில்லை.

நாகப்பட்டினத்தில், தெரு நாய் ஒன்றைப் பிடித்து அதைக் கரடு முரடான கப்பாணிக் கயிற்றால் திண்ணைக் கம்பத்தில் கட்டி வைத்திருந்தோம் நானும் என் நண்பர்களும். அதற்குப் பெருங்காயம் சேரக்கூடாது, உப்பு சேரக்கூடாது என்றெல்லாம் பிள்ளைத்தாய்ச்சிக்குப் பத்தியம் சொல்வது போல் சரோஜா மாமி எச்சரித்துக் கொண்டே இருப்பார்.அதைப் புறக்கணித்துவிட்டு, பழைய இட்டிலி, வறட்டுத் தோசை, ஊசிப்போன உப்புமா, புளித்த பழையது, எரிச்ச குழம்பு என்று கண்டதையெல்லாம் கொடுப்போம். முதலில் வீரமாகக் குலைத்துக் கொண்டிருந்த அது இதையெல்லாம் தின்றதாலொ என்னவோ மெல்ல ஷீனமாகி சீக்குக் கோழி போலப் படுத்துவிட்டது.

சாய்பாபா ரொட்டி என்று ஒரு சமாச்சாரம் அப்போது ரொம்பப் பிரபலம். டீத் தண்ணீரை ஊற்றி ரொட்டி குட்டி போடுகிறது என்று அதை லேயர் லேயராகப் பிரித்தெடுத்து மாசக்கணக்கில் ஊரெல்லாம் சுழன்று கொண்டிருந்தது. அதில் ஒன்றை ஒரு பையன் எடுத்துவந்தான். அந்த டிஃபன் பாக்ஸை நாயின் முகத்தருகே வைத்துத் திறந்தான். பெல்ட் ஸ்லிப்பாகிற ரைஸ்மில் மாதிரி ஒருதரம் கத்திவிட்டு நாய் உடனடியாக சிவனடி!

கொஞ்சம் சாடிஸமாகத் தெரிந்தாலும் எங்களுக்கு ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு உண்டு.

ஒரு கொட்டாங்கச்சியில் சோற்றை வைத்துக் கொண்டு ‘தோ…. தோ’ என்று கூப்பிடுவோம். தேவைய்யர் தெருவிலிருந்து இந்த தேவலோகத்துக் கிண்கிணி அழைப்பைக் கேட்டு நாய்கள் நாலுகால் பாய்ச்சலில் வரும். மிகச் சரியாக பாயிண்ட் பிளான்க் ரேஞ்சில் அவை வந்தடையும்போது சட்டென்று கையில் கல்லை எடுப்போம். சடன் பிரேக் பிடித்து செல்லுபடியாகாமல் லா அஃப் கன்சர்வேஷன் அஃப் மோமெண்டம் படி அவை சர்ரென்று சறுக்கியபடி ஏறக்குறைய கல்லடி படுகிற அண்மைக்கு வந்து அதைத் தவிர்க்க அவசரமாகப் பின்வாங்கி அபவுட் டர்ன் அடிக்கும்.

சென்னைக்கு வந்து கல்லூரியில் சேர்ந்த பிறகு ஒரு நாய் என்னுடன் நிர்ப்பந்தமான நட்பில் இருந்தது. வேலைக்குப் போனபிறகு கூட நட்பு தொடர்ந்தது. ஃபர்ஸ்ட் சிஃப்ட்டுக்காக காலை நாலு இருபது ரயிலைப் பிடிக்கப் போனால் பிளாட்ஃபாரம் வரை வந்து வழியனுப்பும். செகண்ட் ஷிஃப்ட் முடிந்து ராத்திரி பனிரெண்டு மணிக்கு வந்தாலும் ஸ்டேஷன் வாசலில் காத்திருக்கும்.

ரொம்பவும் உறவு பலப்பட்டதில், ஒருநாள் அதற்கு சோறு வைத்துவிட்டு தலையைத் தடவிக் கொடுத்தேன். அங்கே பிடித்தது வினை. முதலில் ஐட்லிங்கில் இருக்கும் இஞ்சினை ஆக்ஸிலரேட் செய்த மாதிரி கிர்ரென்றது. இது ஒரு எச்சரிக்கை என்று புரியாமல் மறுபடி தடவினேன். அவ்வளவுதான்.

‘வழ்..வழ்…வழ்…குர்ர்ர்ர்ர்ர்’ என்று ஒரு சத்தம்.

தொடையில் பிராண்டி, மணிக்கட்டில் கடித்துவிட்டு குண்டு வைத்த தீவிரவாதி மாதிரி மாயமாய் மறைந்துவிட்டது.

அடுத்த பதிநாலு நாட்களுக்கு காலை ஜி.ஹெச்சில் நாய்க்கடி வார்டில் முதல் ஓப்பி நான்தான். ஒவ்வொரு ஊசிக்கும் ஐந்து டிகிரி பெண்ட் ஆகி, பதிநாலாம் நாள் ராமாயணக் கூனி மாதிரி ஆகிவிட்டேன். ரோட்டில் வெறுமனே நடந்து போனாலே பெண்கள் எல்லாம் நான் தப்புப் பார்வை பார்ப்பதாக எண்ணி பல்லிடுக்கு வழியாக சபித்தார்கள். நல்லெண்ணை சேர்க்காதே, உப்பு சேர்க்காதே, புளி சேர்க்காதே என்று ஆளாளுக்குப் பத்தியம் சொன்னார்கள். எதுவுமே தின்னாமல் தெனாலிராமன் குதிரை மாதிரி ஆகி, சாப்பிடலாம் என்று சொன்ன போது தொட்டுக் கொள்ள மிளகாய்ப்பொடி கொடுத்தால் வைக்கோல் கூடத் தின்கிற நிலைக்கு வந்திருந்தேன்.

என்றைக்காவது கோபத்தில் நான் வாள்வாளென்று கத்தினால்

“சரியா எண்ணினீங்களா? பதிநாலுதானா, ஒண்ணுரெண்டு விட்டுப் போயிருக்கும் போலிருக்கே?” என்று சந்தேகப் பார்வை பார்க்கிறார் என் இல்லத்தரசி.

31 comments

  1. //”சரியா எண்ணினீங்களா? பதிநாலுதானா, ஒண்ணுரெண்டு விட்டுப் போயிருக்கும் போலிருக்கே?” என்று சந்தேகப் பார்வை பார்க்கிறார் என் இல்லத்தரசி.//

    சூப்பர்…
    உங்க ஸ்டைலே தனிதான்…

  2. // தொட்டுக் கொள்ள மிளகாய்ப்பொடி கொடுத்தால் வைக்கோல் கூடத் தின்கிற நிலைக்கு வந்திருந்தேன்//

    ஆனாலும் உங்களுக்குள் தான் எவ்வளவு நகைச்சுவை? படு பயங்கரமாக சிரிக்க வைத்த பதிவு. அருமை.

  3. எனக்கும் நாய்னா ரெம்ப அலர்ஜிங்க… என்னை எல்லாரும் மெரட்டறதே உனக்கு அடுத்த பர்த்டேக்கு நாய்குட்டி கிப்ட் பண்ணிடுவேன்னு சொல்லித்தான்… அப்படி இருக்கு நெலம… என்னோட ப்ளாக்லயும் இப்ப நாய் எபிசொட் தன் ஓடிட்டு இருக்கு…
    கடைசி லைன் உங்க இல்லத்தரசி டச் சூப்பர்…. ஹா ஹா ஹா…

  4. அருமையான humour
    >>‘அஹ்ஹ்ஹ்ஹ்….அஹ்ஹ்ஹ்ஹ்ஹ்’ என்று அப்னா தேஷ் பாட்டில் ஆர்.டி.பர்மன் மாதிரி சப்தம் செய்யும்.
    பெல்ட் ஸ்லிப்பாகிற ரைஸ்மில் மாதிரி
    தொட்டுக் கொள்ள மிளகாய்ப்பொடி கொடுத்தால் வைக்கோல் கூடத் தின்கிற நிலைக்கு >>
    Great Observations and analogies..
    சுஜாதா+js ராகவன் படித்தது போல் இருந்தது,
    கீப் இட் அப் சார்

  5. //அதற்கு சோறு வைத்துவிட்டு தலையைத் தடவிக் கொடுத்தேன். அங்கே பிடித்தது வினை. //

    இது தான் சார் நீங்க செய்த தவறு.. சாப்பாடு வைத்து விட்டு நாயை தொடக்கூடாது…

    அதுவும் டாபர்மேன் ரெம்ப மோசம்… சாப்பிடும் போது அது வளர்ப்பவரையே கடிக்க தயங்காது.

  6. //தரையில் உட்கார்ந்து வர்க்கி தின்று கொண்டிருப்பார். அவர் நாய் சோஃபாவில் உட்கார்ந்து டைம்ஸ் ஆஃப் இண்டியா பார்த்துக் கொண்டிருக்கும்// ஆனாலும் இவ்வளவு கூடாது ..நாய்க்கும்…. வர்க்கி மனிதர்க்கும் …

  7. 😦

    எனக்கு நாய் அலர்ஜி தான். ஆனால், பிறந்த வீடு புகுந்த வீடு இரண்டிலுமே நாய் அன்பர்கள்/வளர்த்தவர்கள்… எங்க வீட்ல பெண்நாய் தான் வளர்த்தோம்… நாயைக் கல்லால் அடிப்பவர்களைக் கண்டால் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கும்:-((. இப்பவும் என் குழந்தைகள்/கணவருக்கு நாய் வளர்க்கணும்னு ஆசையா இருக்கு, வீட்டுல இருக்கும் காளியம்மனுக்கு (ஹிஹி) பயந்து வாரத்துக்கு ரெண்டு தடவை மட்டும் பயந்து பயந்து லெஸ் நாய்ஸ் பண்றாங்க‌…

    உங்க பதிவு சிரிப்பாய் இருந்தாலும், என்னமோ சொல்லணும்னு தோணிச்சு. தப்பா நினைச்சுக்காதீங்க.

  8. //ஆக்ரோஷக் குரைப்பு, நுழைநரித்தனமான ஊளை, அழுகை, கேள்வி கேட்கிற பாணியில் ‘லொள்’ளிவிட்டு பதிலுக்குக் காத்திருக்கும் செவிட்செல்வங்கள் என்று ராத்திரி பூரா டார்ச்சர். நாய் அழுதால் அந்தத் தெருவில் சாவு நிகழும் என்பார்கள். //
    KNOW NOICE PLEASE.

  9. மேடம் , வாக்கிங் போகும்போது பாத்துக்குங்க, எங்கேயாவது தந்தி கம்பம் கிட்ட ஒதுங்கிட போறாரு….

  10. ஆஹா, பதிவு அருமை நண்பா. ஆனாலும் நாய்களைப் போல நட்பான பிராணிகள் எதுவுமே இல்லை. நாய்களுடம் விளையாடிக் கொண்டிருந்தால் நேரல் போவதே தெரியாது.

  11. நானும் கேக்கணும்னு நெனச்சேன் – எத்தனை ஊசி போட்டாங்கன்னு. என்னைக் கேட்ட நாய் நம்மளைக் கடிச்சா திருப்பி அதைக் கடிச்சுடறது பெஸ்டும்பேன்.

    நாய்களோட எப்பவுமே எனக்குப் பழக்கம் உண்டு (இதைப் படிச்சு என் நண்பர்கள் சுற்றம் எல்லாம் என்னை ஒரு மாதிரி பார்க்கும் அபாயம் உண்டு, இருந்தாலும்); குரோம்பேட்டை நாள்ல டைகர்; பிறகு ஏகேசி (க்ளேரினட் காரர் இல்லை – இது கழகம்) நாய்கள். நினைவு தெரிஞ்ச நாள்ளலந்து நாய் தான். நாயில்லாமல் நானில்லை. அதனால, துணிஞ்சு சொல்வேன்: நாய் கடிச்சுதுனா நீங்க எதுனா செஞ்சிருக்கணும் 🙂

    தினமொரு பதிவா? வெள்ளாடுங்க. தேவலோகத்து கிண்கிணி ரொம்ப ரசிச்சேன்.

  12. நானும் கேக்கணும்னு நெனச்சேன் – எத்தனை ஊசி போட்டாங்கன்னு. என்னைக் கேட்டா, நாய் நம்மளைக் கடிச்சா திருப்பி அதைக் கடிச்சுடறது பெஸ்டும்பேன்.

    நாய்களோட எப்பவுமே எனக்குப் பழக்கம் உண்டு (இதைப் படிச்சு என் நண்பர்கள் சுற்றம் எல்லாம் என்னை ஒரு மாதிரி பார்க்கும் அபாயம் உண்டு, இருந்தாலும்); குரோம்பேட்டை நாள்ல டைகர்; பிறகு ஏகேசி (க்ளேரினட் காரர் இல்லை – இது கழகம்) நாய்கள். நினைவு தெரிஞ்ச நாள்ளலந்து நாய் தான். நாயில்லாமல் நானில்லை. அதனால, துணிஞ்சு சொல்வேன்: நாய் கடிச்சுதுனா நீங்க எதுனா செஞ்சிருக்கணும் 🙂

    தினமொரு பதிவா? வெள்ளாடுங்க. தேவலோகத்து கிண்கிணி ரொம்ப ரசிச்சேன்.

  13. நீங்க விரட்டிவிட்ட நாய்கள் தான் இப்ப மைலாப்பூர்ல சுத்துகிறதோ;)
    கொம்புளதற்கு அஞ்சு முழம் தெரிஞ்ச கதை. நாய்க்கு எத்தனை முழம்னு பார்க்கணும்.:)

    அருமை சூப்பர். சிரித்து முடிக்கவில்லை. நன்றி.

  14. //பெல்ட் ஸ்லிப்பாகிற ரைஸ்மில் மாதிரி ஒருதரம் கத்திவிட்டு நாய் உடனடியாக சிவனடி!//

    ஆடியோ விஷூவலாக கற்பனை செய்து பார்த்து சிரிக்க வைத்த வரிகள். நல்ல நகைச்சுவைப் பதிவு.

  15. யப்பா முடியல. எவ்ளோ நேரம் தான் சிரிக்காத மாதிரியே நடிக்கிறது, அலுவலகத்தில் இதை படிக்கும் போது

  16. உங்கள் பதிவு எப்பவும் என்னை ஏமாற்றியது இல்லை காமடியில், இதுவும் அப்படியே உங்களுக்கு ஹாஸ்யம் தண்ணிபட்ட பாடு தொடர வாழ்த்துக்கள்.

ரேவதிநரசிம்ஹன் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி