காஃபி ரைட்ஸ்

சூடாக, நுரையோடு ஒரு காஃபி அடித்துவிட்டு வந்து இதைப் படிக்கத் தொடங்குங்கள்.

 ”இந்தா காஃபி” என்ற குரல் கேட்டால்தான் காலையில் போர்வையையே பலர் விலக்குகிறார்கள்.

இதிலும் பலர் பல் தேய்ப்பதற்கு முன்னாலேயே வெறுமனே வாய் கொப்பளித்துவிட்டு காஃபி குடிக்கிற ஜாதி. பல் தேய்த்தபிறகு இன்னொருதரம் குடிப்பவர்கள் அந்த ஜாதியில் ஒரு சப்செட்.

குடிக்கிற பழக்கத்தைக் கூட சரி பண்ணிவிடலாம். காஃபி பழக்கம் விடுவதற்கு ரொம்பக் கஷ்டமான பழக்கம்.

ஐந்தாறு வருஷங்கள் காபி குடிக்காமல் இருந்தேன். சிங்கப்பூரில் இருந்து ஜப்பான் போகிற ஃபிளைட்டில் ஒரு காஃபி கொடுத்தார்கள். அதன் மணமும், சுவையும்….. ஆஹா. தவத்தில் இருந்த விஸ்வாமித்திரரை சூடேற்றின மேனகை மாதிரி இருந்தது.  ஆகவே என் (காஃபிக்)கற்பைப் பறி கொடுத்து விட்டேன்.

முக்கியமாக அந்தக் காஃபியைக் கொடுத்த ஜப்பானிய ஹோஸ்டஸ், முன்னால் வந்து மண்டியிட்டு, “குடியுங்கள் என் கண்ணாளா” என்கிற மாதிரி கொடுத்தது காரணமாக இருக்கலாம்.

சரித்திரத்தில் 1583ம் வருஷம் ஒரு ஜெர்மன் டாக்டர் எழுதியிருப்பதுதான் காஃபியைப் பற்றிய மிகப் பழமையான குறிப்பு. “காஃபி என்பது இங்க் மாதிரி கறுப்பான ஒரு கொழகொழா திரவம். பல வயிற்று உபாதைகளுக்கு இது மருந்தாகும்.”

பாலோடு சேர்ந்த காஃபி நாம் மட்டும்தான் குடிக்கிறோம். ஏறக்குறைய மற்ற எல்லா நாடுகளிலும் பிளாக் காஃபிதான்.

காஃபி தமிழ்க் கலாச்சாரத்தின் ஒரு முக்கியமான அங்கம். தாலியே கட்டாமல் கூட கல்யாணம் நடக்கும், காஃபி இல்லாமல் நடக்காது. மாப்பிள்ளை வீட்டுக்காரர்களுக்குத் தரும் காஃபி கொஞ்சம் அப்படி இப்படி இருந்துவிட்டால் குடுமி பிய்ந்து போகிற அளவுக்குத் தகறாறு நடந்த கல்யாணங்களை நான் பார்த்திருக்கிறேன். (அதென்ன மாப்பிள்ளை வீடு? என்று முந்தானையை சொருகிக் கொண்டு சண்டைக்கு வரத் தயாராகும் பெண்ணுரிமைப் பிரதிநிதிகளே, கபர்தார், நான் பேசிக் கொண்டிருப்பது பழைய கதை. அந்தக் கதை என் கல்யாணத்தின் போதே மாறியாகிவிட்டது)

“அவன் வீட்டுக்குப் போனால் ஒரு காஃபி கூடத் தரமாட்டான்” என்கிற ஸ்டேட்மெண்ட் விருந்தோம்பலில் காஃபியின் முக்கிய பங்கை எடுத்துரைக்கிறது.

அறுபதுகளில், நல்ல பசும்பாலில் திக்காக டிகாஷன் போட்டு ஒரு லோட்டா நிறைய காஃபி குடிக்கிற பிரகிருதிகள் நிறையப் பேர் இருந்தார்கள்.

முதல் டிகாஷனில் காஃபி குடித்துவிட்டு, வேலைக்காரி வருவதற்குள் இரண்டாம் தண்ணீர் ஊற்றி வைக்கிற குடும்பங்கள் இன்றைக்கும் இருக்கின்றன.

டபராவிலிருந்து டம்ளர், டம்ளரிலிருந்து டபரா என்று சொர்ர்ர் சொர்ரென்று ஆற்றி நுரையோடு காஃபியை உறிஞ்சுவதில் இருக்கிற சுகமே தனி. நுரை இல்லாமல் காஃபி கொடுத்தால், “இதென்ன விளக்கெண்ணை மாதிரி” என்று தூர ஊற்றிவிடுகிறவர்களை எனக்குத் தெரியும்.

தஞ்சாவூர் மாவட்டத்து ஹோட்டல்களில் பித்தளை டபரா டம்ளரில் காஃபி சர்வ் செய்யும் அழகே அழகு. டம்ளரை டபராவில் கவிழ்த்து இட்டிலியை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே கொண்டுவைத்து விடுவார்கள். இந்த வேக்யூம் டெக்னிக்கால் காஃபி சீக்கிரம் ஆறாது!

காஃபி, ஒரு வியாதியாகவே தொற்றிக் கொண்டு விடும்.

பயப்படாதீர்கள். குடிப்பழக்கம் மாதிரி விட்டுத்தான் ஆக வேண்டும் என்கிற அளவுக்கு ஆபத்தான பழக்கமில்லை காஃபி. (இன்னும் சரியாகச் சொன்னால் அதிகமாகக் குடிப்பதால் குடலில் வரும் சிரோஸிஸ் நோய் காஃபி சாப்பிடுவதால் வராதாம்! சிரோஸிஸ் வந்தால் மொத்தக் குடலையும் டிரான்ஸ்பிளாண்ட் செய்ய வேண்டும். செலவு, ஐம்பது லட்சம். எனவே, என் இனிய சரக்கு ரசிகர்களே, நிறைய காஃபி சாப்பிடுங்கள்.) கொஞ்சம் அஸிடிக். பசியைக் கெடுக்கும். அவ்வளவுதான்.

காஃபியில் இருக்கும் காஃபின் என்கிற சமாச்சாரம் மனிதர்களின் நரம்பு மண்டலத்தை மீட்டி விடுகிறது. காஃபின் ஒரு சைக்கோ ஆக்டிவ் சமாச்சாரம். அலுப்பு, மனச்சோர்வை எல்லாம் தாற்காலிகமாக நீக்குமாம். டென்ஷன், மற்றும் தலைவலியைக் குறைக்கவல்லது. ஒன்றைப் பற்றிய நம்முடைய மனப்பாங்கையே கூட மாற்றுகிற சக்தி உண்டாம் காஃபிக்கு. டிரக்குகள் என்று நாம் சொல்லும் போதை மருந்துகள் சைக்கோ ஆக்டிவ் சமாச்சாரங்கள்தான். காஃபியும் நரம்பு மண்டலத்தை அடிமைப்படுத்தி, சாப்பிடுகிற நேரம் வந்தால் கொண்டா கொண்டா என்று தொல்லை பண்ணும்.

பென் ஜான்சன் உபயோகித்த ஸ்டெராய்ட் இந்த சைக்கோ ஆக்டிவ் ஜாதிதான்.

காஃபி விதை ஒரு வகை எண்ணை வித்துதான். காஃபியில் இருக்கும் எண்ணைச் சத்து உடலின் எல்.டி.எல். கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. எல்.டி.எல். கொலஸ்ட்ரால் ஜாஸ்தியானால் ரத்தக் குழாய்களில் ஒரு சொரசொரா லேயர் உண்டாகி ரத்த ஓட்டத்தைத் தடை செய்யும். பயப்படாதீர்கள் நாம் உபயோகிக்கும் மற்ற கொழுப்பு நிறைந்த எண்ணைகளைவிட இதில் எல்.டி.எல் குறைவுதான். ஃபில்ட்டர் காகிதத்தில் தயாரித்த காஃபி இந்த ரிஸ்க்கைக் குறைக்கிறது.

காஃபியின் எதிர்மறை விளைவுகளையும், நன்மைகளையும் சீர்தூக்கிப் பார்த்தால் நன்மைதான் விஞ்சி நிற்கிறது என்று ஹார்வார்ட் யுனிவர்ஸிட்டி சொல்லுகிறது.

காஃபி குடிப்பது கெட்ட பழக்கமோ நல்ல பழக்கமோ, ரொம்பக் காஸ்ட்லியான பழக்கம். நாலு பேர் இருக்கிற குடும்பத்தில் காஃபிப் பொடிக்கு மட்டும் ஐநூறு ரூபாய் ஆகிறது. அந்த ஐநூறு ரூபாய்க்கு அரிசி வாங்கினால் மாசம் பூரா சாப்பிடலாம்!

16 comments

  1. காலையில் நன்றாகவே நுரையடிச்சு காஃபி கொடுத்டுவிட்டீர்கள்..

    விளக்கெண்ணை உவமை ஜோர்…. சில சமயத்தில் சில இடங்களில் இப்படி ஆவது உண்டு…

    நான் “டீ“ ப்பார்ட்டி … “கண்ணாளா“ மாதிரி சந்தர்ப்பங்களில் காஃபியை விடுவதில்லை

  2. நாங்கள் இரண்டு காப்பியை ஒன்றாகக் குறைத்துக் கொண்டுவிட்டோம்:)
    கும்பகோணம் டிகிரி கா1பி அரைக்கிலோ விலையே அரை மூட்டை அரிசி விலைக்கு ஏறிவிட்டதால் இந்த ஏற்பாடு.
    காஃபியைப் போற்றி ஒரு பதிவு இட்டதால் உங்களுக்கு என்ன பதக்கம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்:)
    நல்ல காஃபி சாப்பிட்ட நிறைவு!

  3. காப்பியை நிறுத்தினால் மாதம் ஆயிரம் ரூபா சேமிக்கலாம் என்று நான் சொல்லப்போக,ஏன், மூச்சை நிறுத்தினால் பத்தாயிரம் சேமிக்கலாமே என்று அவ்விடத்திலிருந்து ‘அன்பு’டன் பதில் வர நான் வழக்கம் போல கப் சிப்..(cup sip ஐ தொடர்ந்தேன்)
    (அவ்விடத்தில் காபி என்றால் உயிராக்கும்;காபிகொட்டை கலரிலேயே ஆறு புடவை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!
    காலையில் ரேடியோவில் தினமும் அருளுரை கேட்பவள் ஒரு நாள் “காபி மிகவும் கெடுதல்;அனாவசிய செலவு” என்று ஒரு பெரியவர் அருளக்கேட்டு,மனம் மாறி நிறுத்தியவள்தான் ,இன்று வரை காலைநேரத்தில் போனதே இல்லை ,ரேடியோ பக்கம்)

  4. காபி பெண்களின் மூளையை சுறுசுறுப்பாகவும், ஆண்களின் மூளையை மந்தமாகவும் ஆக்குவதாக ஒரு புதிய கண்டுபிடிப்பு! நேற்றைக்குதான் நியூஸ் பார்த்தேன். 🙂 http://www.nerve.com/news/current-events/study-coffee-makes-women-smarter-men-dumber

  5. Ganpat |
    //ஒரு பெரியவர் அருளக்கேட்டு,மனம் மாறி நிறுத்தியவள்தான் ,இன்று வரை காலைநேரத்தில் போனதே இல்லை ,ரேடியோ பக்கம்)//

    இது எப்படி இருக்கு? சூப்பர்.

  6. //முதல் டிகாஷனில் காஃபி குடித்துவிட்டு, வேலைக்காரி வருவதற்குள் இரண்டாம் தண்ணீர் ஊற்றி வைக்கிற குடும்பங்கள் இன்றைக்கும் இருக்கின்றன.//நறுக்குனு! ஒரே குத்தா குத்திடிங்க சார்!

    1. ஸ்பெஸிஃபிக் கிராவிட்டி பார்க்கிற ஹைட்ரா மீட்டரை டிகிரி பார்க்கிற மீட்டர்ன்னு சொல்வாங்க. திக்கான பால்ன்னா டிகிரிப்பால்ன்னு சொல்ற பழக்கம் அதனால வந்திருக்கலாம்.

  7. என் பாட்டி மாமாவை எப்பொழுதும் திட்டுவார்கள் கடன்காரன் காப்பி காப்பி என்று குடிக்கிறாய்
    உனக்கு அண்டாவில் தான் காப்பி தரவேண்டும் என்பார்கள். மாமாவோ நீ எப்பொழுதும் சொல்கிறாய் .
    அனால் அண்டாவில் எப்போ தருவாய் என்பார்கள். இந்த சண்டை தினமும் நடக்கும். காப்பிக்காக
    கல்யாணத்தில் நடக்கும் சண்டைகள் ஜோர் . நல்ல பதிவு வாழ்த்துக்கள்
    Viswanathan

எதுவா இருந்தாலும் எழுதுங்க!