அதாங்க ஏக்டிங்

டைரக்டர் ரத்னமணி சோர்ந்து போனார்.

 ஒரு ஆள் கூடத் தேரவில்லை. பேசாமல் படம் எடுக்கிற ஐடியாவையே டிராப் செய்து விடலாமா என்று ஒரு நிமிஷம் யோசித்தார். சேர்வராய வர்மன் என்கிற கதா பாத்திரம் ரொம்ப வீரம் செறிந்தது. அதை எழுத்தாளர் கூர்மன் நாவலாக எழுதும் போது ஒவ்வொரு வாசகருக்கும் மனதில் ஒவ்வொரு விதமாகப் பதிவாகியிருக்கும். எல்லோரும் ஒப்புக் கொள்கிற மாதிரி அந்தப் பாத்திரத்தைத் திரையில் காட்டுவது ரொம்ப சிரமம்.

 ஸ்க்ரீன் டெஸ்ட்டுக்கு வந்த ஒவ்வொரு ஆளும் ஆஜானுபாகுவாக, புஸ்தி மீசையுடன், புல் ஒர்க்கர் பாடியுடன் வந்திருந்தார்கள்.

 “காவிரி மைந்தன் நாவல் படிச்சிருக்கீங்களா?”

 “படிச்சிருக்கேன் சார்.. சேர்வராயனா நடிக்கணும்ங்கிறது என் வாழ்க்கையோட…….”

 “ஓக்கே, ஓக்கே…. முன்னால நடிச்சி அனுபவம் இருக்கா?”

 “ஆமாம் சார் ஸ்கூல் காலேஜ்ல எல்லாம் மாறு வேஷப் போட்டி, டிராமால எல்லாம் பிரைஸ் வாங்கியிருக்கேன்”

 “பிடிச்ச ஆக்டர் யாரு?”

 “சிவாஜி சார்… என்ன நடை, என்ன குரல்… அவர்தான் சார் என் இன்ஸ்பிரேஷன்”

 இதுதான் ஏறக்குறைய வந்திருந்த ஒவ்வொருவருடனும் நடந்த உரையாடல். காட்சியைச் சொல்வார்,

 “ஓடி ஒளிஞ்சிகிட்ட எதிரிகளை காட்டில் இருபுறமும் தேடியபடி சேர்வராயன் வர்ரான். அந்த நடையிலயே அவன் பேச வேண்டிய வசனம் இருக்கணும். ‘தனித்து வந்திருக்கிறேன் துணிவில்லாப் பேடிகளே. கையில் வாளில்லை, வேலில்லை, வில்லில்லை, நெஞ்சிலிருக்கும் துணிவே ஆயுதம், முறுக்கேறிய உடலே கேடயம். நீங்கள் எல்லோரும் சேர்ந்து வந்தாலும் எனக்கீடாவீரோ? பன்மீன் காய்கலா ஆகும் நிலா’ இதுதான் வசனம். பேசுங்கள்.”

 அங்கேதான் ஆரம்பிக்கும் விசனம்.

 மேயப் போன மாடு காணாமல் போய்விட்ட மாதிரி இரண்டு பக்கமும் தேடுவார்கள். ஆயில் பாத் எடுக்கப் போகிற மாதிரி உடம்பில் ஒட்டாமல் கைகளைத் தள்ளி வைத்துக் கொள்வார்கள். தீமிதி போல காலைத் தூக்கித் தூக்கி வைப்பார்கள். ‘தணித்து வந்திருக்கேன் துணியில்லாப் பீடிகளே’ என்று ஆரம்பிப்பார்கள்.

 சலித்து விட்டது அவருக்கு.

 துணியில்லாப் பீடியைக் கூட டப்பிங்கில் சரி செய்து கொள்ளலாம். அதே ஆளைத்தானே திரையில் காட்டியாக வேண்டும்!

 “எல்லாரும் ஆச்சா இல்லை வேறே யாராவது பாக்கியா?” என்றார் உதவியாளரிடம்.

 “ஒருத்தன் இருக்கான் சார்”

 “கூப்பிடு”

 “உயரமே இல்லை சார் ஆளு. கறுப்பா இருக்கான். கிராமத்தான் போல இருக்கான்”

 “கூப்பிடு பாக்கலாம்”

 “வனக்கஞ்சார்”

 ”பேரென்ன?”

 “பிச்ச”

 “என்ன படிச்சிருக்கே?”

 “ஆறாப்பு”

 “காவிரி மைந்தன் படிச்சிருக்கியா?”

 “புக்கெல்லாம் படிக்கிற லெவலுக்கு இல்லைங்க. பொஸ்தகத்துல பொம்மதான் பார்ப்பேன்”

 “நடிச்ச அனுபவம் உண்டா?”

 “இல்லைங்க” என்றான் யோசித்து.

 “என்ன வேஷத்துக்கு ஆள் எடுக்கறேன் தெரியுமா?”

 “தெரியுங்க, சொன்னாங்க. ராசா வேசம்ன்னு”

 “தெரிஞ்சுமா வெய்ட் பண்ணிகிட்டு இருந்தே? என்ன நம்பிக்கை உனக்கு?”

 “ஏக்டிங் பண்ண முடியும்ன்னு கான்ஃபிடண்ட் இருக்குங்க”

 ரத்னமணி சிரித்து விட்டு, “சரி, சரி…. உனக்கேத்த ரோல் வர்ரப்ப கூப்பிடறேன். புறப்படு” என்றார்.

 “இந்த வேசம் எனக்கேத்ததுதாங்க. வஜனத்தச் செல்லுங்க. ஏக்டிங்கப் பாத்துட்டுப் பொறவு பேசுங்க”

 ரத்னமணி சில வினாடிகள் யோசித்தார். இவனிடம் விவாதம் பன்ணிக் கொண்டிருந்தால் நேரம்தான் வீணாகும். காட்சியைச் சொன்னார், வசனத்தைச் சொன்னார்.

 பத்தடி பின்னால் போனான்.

 “வாருங்கள் பேடிகளே” என்று உரத்து சொன்னபடி நடக்க ஆரம்பித்தான். இரைதேடும் சிங்கம் மாதிரி இருபுறமும் மாறி மாறிப் பார்த்தபடி ஒவ்வொரு அடியையும் கவனமாக வைத்தான். பார்வையில் தீக்கனல். தொடர்ந்து அழுத்தம் திருத்தமாக ஒரு உச்சரிப்புப் பிழையில்லாமல் பேசியபடி நடந்து வந்தான். ‘பன்மீன் காய்கலா ஆகும் நிலா’ என்று அவன் முடித்த போது தன்னையறியாமல்,

 “எக்ஸல்லண்ட்” என்றார்.

 “எப்டிய்யா இது?” என்றார் ஆச்சரியம் தாங்காமல்.

 “அதாங்க ஏக்டிங்” என்றான்.

4 comments

  1. சார்,
    இப்பதான் அவரு ம(ஆ)ணி புடுங்கலன்னு கேட்டபுறம் நிம்மதியா இருக்கோம்
    இப்படி எதாவது சொல்லி கெளப்பி விற்றதிங்கோ!!!

Ezhilarasi Pazhanivel -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி