கருத்துக் கணிப்பு

வந்தாச்சு.. தேர்தல் முடிவுகள் வந்தாச்சு!

போன வாரம் ஹெட்லைன்ஸ் டுடே வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளில் திமுக கூட்டணி 120 இடமும் அதிமுக கூட்டணி 105 இடமும் இருந்தன.

 நேற்று சிஎன்என் ஐபிஎன் வெளியிட்ட முடிவுகள் அதற்கு நேர் எதிரிடையாக இருந்தன. ந்யூஸ் எக்ஸ் (சேர்த்துச் சொன்னால் அர்த்தம் வில்லங்கமாக இருக்கும்!) அதிமுக கூட்டணி 172 இடம் பிடித்து ஸ்வீப் செய்யும் என்றார்கள். ஸ்டார் ஹிந்தி சேனல் திமுக வுக்கு தனிப் பெரும்பான்மை என்றது.

 ஆக மொத்தம் வாநிலை அறிக்கை மாதிரி எல்லா மாதிரியும் சொல்லி விட்டார்கள்!

 எல்லாரும் ஒத்துக் கொண்ட இரண்டு விஷயங்கள் காங்கிரஸ் ஒற்றை இலக்கத்தைத் தாண்டாது, திமுக இப்போது இருப்பதை விட மிகக் குறைவான எண்ணிக்கைகளை மட்டுமே பெற முடியும்.

 2ஜி, குடும்ப அரசியல், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, ஓட்டுக்குப் பணம் இத்தனை ஃபேக்டர்களைத் தாண்டி, தேர்தல் கமிஷனின் அதிரடிகளைத் தாண்டி, விஜயகாந்த்-ஜெயலலிதா என்கிற பலம் வாய்ந்த கூட்டணியைத் தாண்டி,

 திமுக 100 இடம் பிடிக்கிறது என்றால், அது ஏறக்குறைய வெற்றி மாதிரிதான்! நிஜ முடிவுகள் என்ன சொல்லப் போகின்றன என்று பார்ப்போம்.

 கருத்துக் கணிப்புகளில் நிறைய டிரா பேக்குகள் உண்டு.

 எல்லாரும் அவர்கள் ஆசைப் படுவதைச் சொல்வார்களே ஒழிய, ஆய்ந்ததைச் சொல்வதில்லை. இந்த சாம்ப்பிள் அளவு சரியா என்று சிக்ஸ் சிக்மா ஆசாமியான என்னைக் கேட்டால், ம்ம்ஹூம்! இரண்டு கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இருக்கும் இடத்தில் நாலாயிரத்திச் சில்லரை வாக்காளர்களின் கருத்து சரியாக இருக்க ஆயிரத்தில் ஒரு பிராபபிலிட்டிதான் இருக்கிறது. 234 தொகுதிகள் இருக்கும் இடத்தில் 70 தொகுதிகளைக் கேட்டால் முப்பது சதவீதத்துக்கும் குறைவான பிராபபிலிட்டியே இருக்கிறது.

 எல்லா கருத்துக் கணிப்புகளிலும் இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் இருக்கும் கருத்துக்கள் 40% க்கு அதிகமாக இருக்கும். கோமதியின் காதலன் கதையில் வரும் பிரணதார்த்தி ஹர அய்யர் மாதிரி, தங்களுக்குப் பிடித்த முடிவு வரும் வரைக்கும் கணிப்பு செய்து கொண்டே இருக்கிறார்கள். வரும்போது நிறுத்தி விடுகிறார்கள்.

 அம்மா ஜெயிக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம். ஆனால், ராமதாஸ் இடுப்பில் கட்டிக் கொண்ட பூனை என்றால் கேப்டன் வேட்டியில் புகுந்த ஓணான்.

 எப்படி சமாளிக்கிறார் பார்க்கலாம்!