நாயகன்

கமலஹாசன் என்கிற களிமண்!

உற்பத்திப் பொறியியலில் முதன்மையானது வார்ப்புகள்.

இரும்பை உருக்கி அச்சில் ஊற்றி விரும்பிய உருவத்தைக் கொண்டு வருகிற யுக்தி. அச்சை எப்படி உருவாக்குவது?

எந்த உருவம் வேண்டுமோ அதை எதிலாவது பதிக்க வேண்டும். அப்படிப் பதிக்கிற போது அந்த உருவத்தின் குழிந்த அச்சு உருவாகிறது. அதில் உருக்கின இரும்பை ஊற்றுகிற போது குவிந்த உருவம் கிடைக்கிறது.

எதிலாவது என்று சொன்னோமே, அது எப்படி இருக்க வேண்டும்?

உருவத்தைப் பதித்த உடன் அப்படியே எடுத்துக் கொண்டு அதே போல பிரதிபலிக்க வேண்டும். அந்தக் குணம் எந்தப் பொருளுக்கு இருக்கிறது?

களிமண்.

களிமண்ணைக் கொஞ்சம் நீர் சேர்த்துப் பிசைந்து கொண்டால், அதில் எந்த உருவத்தை வேண்டுமானாலும் உருவாக்கலாம். அதை அச்சாக உபயோகித்தால் அது மாதிரி பல உருவங்களை உற்பத்தி செய்யலாம். மண்ணாலான அச்சை விட அது உருவாக்குகிற இரும்பு உருவங்கள் உறுதியாகவும் நீண்ட நாள் நீடித்திருப்பவையாகவும் இருக்கும்.

டைரக்டர்களின் கற்பனை உருவத்தை மனதில் பதித்து அச்சை உருவாக்கி அதில் இரும்பு வார்ப்பு மாதிரி உறுதியான பாத்திரங்களை உருவாக்குகிற திறமை இருக்கிற கமலஹாசன் களிமண்தானே? எத்தனை எத்தனை வார்ப்படங்களை உருவாக்கினாலும் மறுபடி தண்ணீர் சேர்த்துப் பிசைந்தால் அடுத்த வார்ப்படத்துக்கு களிமண் தயாராகி விடும்.

வார்ப்புகள் அழிந்தாலும் களிமண் அழிவதில்லை.

ஐம்பது வருஷமென்ன, ஐயாயிரம் வருஷமானாலும் களிமண் அதே குணத்தோடு, மென்மேலும் சிறந்த வார்ப்புகளை உருவாக்கவல்லது. தொடரட்டும் புதுப் புது வார்ப்புகள்.

‘சலங்கை ஒலி’ மற்றும் ‘சிப்பிக்குள் முத்து’ படங்களைப் பார்த்த சிவாஜி கணேசன், “நல்லாத்தான் நடிச்சிருக்கே, ஆனா என்னைக்கு நீ தாடி மீசை இல்லாம கிழவன் வேஷம் போடறயோ அன்னிக்குத்தான் உன் நடிப்பை நான் பாராட்டுவேன்” என்றாராம்.

கமலின் உடனடி முயற்சி நாயகன்.

தாடி இல்லாமல், விக் வைக்காமல் அதில் வயதான வேடம் பண்ணி நடிகர் திலகத்துக்குக் காட்டிய போது “நான் ஹீரோவா பண்றப்போ இது மாதிரி கதைகள் வரல்லையெடா!” என்று ஏங்கியதோடு நில்லாமல் “இந்த வருஷமும் பெஸ்ட் ஆக்டர் அவார்ட் உனக்குத்தாண்டா” என்றாராம்.

கமலின் அடுத்த முயற்சி தாடி மீசை ரெண்டுமே இல்லாத கிழ வேடம்.

சுஜாதா ரங்கராஜன் கமலிடம் “ஒரு தாத்தாவை ஹீரோவா வெச்சி எடுத்த படம் சக்கைப் போடு போட்டு ஏகப்பட்ட அவார்டுகளை அள்ளியிருக்கிறதே, அப்படி ஒரு படம் பண்ண ஆசை இருக்கா?” என்று காந்தி படத்தை சுட்டிக் காட்டி கேட்டாராம். அதுதான் இந்தியன் படத்தின் விதை.

கமலின் இந்தியன் பட கெட் அப் ஜெ.கிருஷ்ணமூர்த்தியை நினைவு படுத்துவதை எத்தனை பேர் கவனித்திருக்கிறீர்கள்?

கமல் உள்பட பலரும் ஜெ.கே யை நாத்திகர் என்று எண்ணியிருக்கிறார்கள். உண்மையில் அவர் ஒரு agnostic. ஏறக்குறைய நாத்திகத்திலிருந்து agnosticism க்கு அவர் மாறியிருப்பதை தசாவதாரம் படம் காட்டுகிறது!