Month: நவம்பர் 2009

இல்லாதது இல்லையா, இருக்கிறது இல்லையா?

“அடேடே.. மீட்டிங்குக்கு நேரமாச்சு” என்றபடி அவசரமாக வாசற்புறம் நடந்த இன்பநேசனை குறுக்கே வந்த அவர் மனைவி தடுத்தாள்.

“இந்தாங்க.. இதை சாப்பிட்டுட்டுப் போங்க” என்று ஒரு வாழைப் பழத்தை நீட்டினாள்.

“நீ பண்றது என் கொள்கைக்கு விரோதமா இருக்கு” என்று சிரித்தபடி சொல்லிக் கொண்டே அதை வாங்கிக் கொண்டார்.

“எது கொள்கைக்கு விரோதம்?”

“சாமி இல்லைன்னு பேசறதுக்கு மீட்டிங்குக்கு போய்கிட்டு இருக்கேன். என்னை நிறுத்தி பிரசாதம் தர்றியே அதைச் சொன்னேன்”

“இதை நீங்க வாங்கி சாப்பிடறது எதுக்காக… இது பிரசாதம்ன்னா?”

“இல்ல மீனாட்சி. உன் மேலே இருக்கிற பிரியத்தினாலே”

“பொண்டாட்டி மேலே பிரியமா இருக்கிறது உங்க கொள்கைக்கு விரோதமா?”

“ம்ம்ம்.. உன்னோட விவாதம் பண்ணி ஜெயிக்க பகுத்தறிவு போதாது. ‘பகுத்’ அறிவு வேணும்”

“மெல்லப் பேசுங்க, நீங்க வடமொழியில பேசறதை உங்க சிஷ்யனுங்க கேட்டுடப் போறானுங்க”

“உன்கிட்ட வாய் கொடுத்தது என் தப்பு. நான் கிளம்பறேன்”

“சரி.. இன்னைக்கு என்ன சப்ஜக்ட்?”

“புதுசா என்ன… கடவுள்ன்னு ஒண்ணு கிடையாதுன்னு ஆணித்தரமா ஆதாரங்களோட பேசப் போறேன்”

“அதெத்தான் நீங்க நல்லா செய்வீங்களே… சரி சரி, போற போது அந்தா வழியில உக்காந்திருக்கே அந்தக் குரங்கை விரட்டிட்டு போங்க”

“யாரைக் குரங்குங்கறே?”

“யாரையும் குரங்குன்னு சொல்லல்லை அந்தால இருக்கிற நிசக் குரங்கைத்தான் சொல்றேன்”

“என்ன உளர்றே… அங்கே எங்க குரங்கு இருக்கு?”

“உங்களுக்கு தெரியல்லையா?”

“இருந்தாத்தான தெரியும்”

“இல்லைன்னு எனக்கு நிரூபிச்சிக் காட்டுங்க”

“உனக்கு என்னமோ ஆயிடுச்சு. நான் கிளம்பறேன்”

“அப்ப நீங்க நிரூபிக்க மாட்டீங்க”

“ஏய், பைத்தியம், இல்லாததை இல்லைன்னு நிரூபிக்கணுமா நானு?”

“இல்லாததை இல்லைன்னு நிரூபிக்க சொன்ன நான் பைத்தியமா?”

“இல்லையா பின்னே?”

“ரொம்பத் தெளிவாத்தான் இருக்கீங்க. அப்ப இருக்கிறதைத்தான் இல்லைன்னு நிரூபிக்கணும்ன்னு சொல்றீங்க”

“என்ன உளர்றே, இருக்கிறதை எப்படி இல்லைன்னு நிரூபிக்க முடியும்?”

“இல்லைன்னாலும் இல்லைன்னு நிரூபிக்க வேணாம். இருந்தாலும் இல்லைன்னு நிரூபிக்க முடியாது. அப்ப எப்பத்தான் இல்லைன்னு நிரூபிப்பீங்க?”

வளர்ச்சிக்குத் தேவை அறியாமை

எப்போதுமே நம் அறிவையே பயன்படுத்திக் கொண்டிருந்தால், நம் வளர்ச்சிக்குத் தேவையான அறியாமை எப்படி நினைவிருக்கும்?

உங்கள் சந்தேகம் புரிகிறது.

நான் காலை வேளையில் சரக்கு அடிப்பதில்லை. இதைச் சொன்னவர் தோரோ. (உச்சரிப்பு சரிதானே?)

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.

என்று வள்ளுவர் சொன்னதைத்தான் இவரும் சொல்லியிருக்கிறார். ஆனால் கொஞ்சம் சுத்தலில் விட்டிருக்கிறார். நானும் கொஞ்சம் சுத்த விடுகிறேனே?

நாம் எதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றாலும் முதலில் நமக்குத் தேவை அறியாமை. ஒன்றைப் பற்றின அறியாமை இல்லையென்றால், அதை அறிந்து கொள்கிற ஆர்வம் வருவதில்லை. நமக்கு நிறைய அறியாமைகள் இருக்கின்றன. ஆனால் அந்த அறியாமை இருக்கிறது என்பதே அறியாமையாக இருக்கிறது.

கற்றுக் கொள்வதில் நான்கு படிகள் இருக்கின்றன.

1. அறியா அறியாமை
2. அறிந்த அறியாமை
3. அறிந்த அறிவுடைமை
4. அறியா அறிவுடைமை

ஒரு ப்ளாக் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ப்ளாகிங் பற்றி ஒன்றும் தெரியாது என்பதே எனக்கு அப்போது தெரியவில்லை. எனக்குத் தெரியவில்லை என்பதே தெரியவில்லை. இது முதல் படி.

ஆரம்பித்த பிறகு நிறைய குழப்பங்கள் ஏற்படுகின்றன. ஆஹா, எனக்கு நிறைய விஷயம் தெரியவில்லை என்பது புரிகிறது. தெரியவில்லை என்பது தெரிகிற இந்த ஸ்டேஜ் இரண்டாவது.

ஒவ்வொன்றாகக் கற்க ஆரம்பிக்கிறேன். இது மூன்றாவது. எனக்குத் தெரிந்திருக்கிறது என்பது புரிகிறது.

திரும்பத் திரும்ப ஒன்றைச் செய்வதாலும், அதனுடன் நீங்காத தொடர்பு இருப்பதாலும் வல்லமை கூடுகிறது. இந்த நான்காவது படியை excellence என்கிறார்கள்.

ஆகவே உங்கள் அறியாமைகளை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்.

பந்திக்கு முந்துவது என்றால் என்ன?

‘பந்திக்கு முந்து படைக்குப் பிந்து’ என்று ஒரு பழமொழி இருக்கிறது.

இதற்கு யாரை அர்த்தம் கேட்டாலும் ‘சாப்பாடுன்னா முதல் பந்தியில் தேடித் போய் உட்கார்ந்து முழுங்கு. சண்டைக்குப் போகணும்ன்னா கடைசீல போ’ என்பார்கள்.

பழமொழிகள் உயர்ந்த கருத்துக்களைச் சொன்னதால்தான் அவை பன்னெடுங்காலமாய் பேசப்பட்டு வருகின்றன.

எனக்கென்னமோ நம் முன்னோர்கள் இப்படிப்பட்ட கருத்தை சொல்லியிருப்பார்கள் என்பதில் நம்பிக்கையில்லை. விருந்தோம்பலிலும் வீரத்திலும் புகழ் பெற்றவர்கள் தமிழர்கள் என்று இலக்கியங்கள் சொல்கின்றன. பழமொழிகள் காலப் போக்கில் திரிந்து போனதற்கு ‘மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே’ என்பது உள்ளிட்ட நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. ஏற்கனவே ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்கிற பழமொழியின் பொருளில் அறிவுக்கும் உணர்வுக்கும் இருக்கும் தொடர்பை சொல்லியிருப்பதைப் பார்த்தோம்.

இதற்கு என்ன அர்த்தமாக இருந்திருக்க முடியும் என்று கொஞ்சம் ஆராய்வோமா?

பந்தி என்பது இங்கே ஆகு பெயர். சாப்பிடப் போகிறவர்களைக் குறிக்கிறது. சாப்பிடப் போகிறவர்களுக்கு முன்னால் இரு என்று சொல்கிறார்கள். முன்னால் இருக்கிறவன் என்ன செய்வான்? பரிமாறுவான். அதாவது படைப்பான். அதனால்தான் படைக்கப் பிந்து என்றார்கள். அதாவது மற்றவர்களுக்குப் படைப்பதற்காக பிந்தி சாப்பிடு என்றார்கள்.

எல்லாருக்கும் படைத்து விட்டு இறுதியில் சாப்பிடு என்பதையே, பந்திக்கு முந்து, படைக்கப் பிந்து என்றார்கள்.

அதைத் தீனிப் பண்டாரங்களும், தொடை நடுங்கிகளும் பிற்காலத்தில் தங்கள் சௌகர்யத்திற்கு மாற்றியதில் படைக்க என்பது படைக்கு என்று ஆகி விட்டது.

சரிதானே?

தமிழ் ஆர்வலர்கள் விவாதத்துக்கு வரலாம்….

அதெல்லாம் மூட நம்பிக்கைங்க…

ஆறு மணி நேரம் தூங்குகிறவன் ஆம்பிளை, ஏழு மணி நேரம் தூங்கினா பொம்பளை எட்டு மணி நேரம் தூங்கினா முட்டாள் என்று என் முன்னோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

எட்டு மணி நேரம் தூங்குகிறவன் எப்படி முட்டாளாவான் என்று அடிக்கடி யோசிப்பேன்.

எட்டு மணி நேரத் தூக்கம் என்பது சராசரி வாழும் வயதுப் பிரகாரம் இருபத்தி மூன்று வருஷம். வாழ்க்கையில் இருபத்தி மூன்று வருஷங்களை தூங்கி கழித்தால் எத்தனையோ வாய்ப்புகளை நழுவ விட்டு விடுவோம் என்கிற அர்த்தத்தில் இருக்கலாம்.

ஆனால் தூக்கத்தின் விஞ்ஞானத்தைக் கொண்டு பார்த்தால் வேறு விதமான அர்த்தங்களைச் சொல்லலாம்.

தூங்குகிறவர்கள் எப்படி சுவாசிக்கிறார்கள் என்று கவனித்திருக்கிறீர்களா?

நீண்ட உள்ளிழுப்பு, சிறிது இடைவெளி, அப்புறம் நீண்ட வெளிவிடுதல். ஒவ்வொரு சைக்கிளும் இருபத்தைந்து செகண்டாவது எடுக்கும். இப்படிப்பட்ட சுவாசம் என்ன நன்மையைத் தருகிறது? காற்றில் இருக்கும் பிராண வாயுவை முழுசாக உடம்பு எடுத்துக் கொள்கிறது. மூளையின் செல்கள் ரீஜெனரெட் ஆக இந்த பிராணவாயு உதவுகிறது.

இது மாதிரித் தூக்கம் நாலு மணி நேரம் தூங்கினால் போதும்.

ஆனால் ஏன் எட்டு மணி நேரம் தூங்கினாலும் அலாரத்தை ஸ்நூஸ் செய்து விட்டு புரண்டு படுத்து தூங்குகிறோம்?

இரண்டு காரணங்கள்.

ஒன்று, பகலை விட இரவு நேரங்களில் பிராணவாயு குறைவாக இருக்கிறது. ஏனென்றால் தாவரங்கள் இரவில் பிராண வாயுவை உள்ளிழுத்து கரியமில வாயுவை வெளியிடுகின்றன.

இரண்டாவது, கொசுவுக்கு பயந்து எல்லா ஜன்னல்களையும் இறுக்கமாக மூடி விட்டுத் தூங்குகிறோம். அறையில் இருக்கிற பிராண வாயு இரண்டு மணி நேரத்தில் காலியாகி அதற்கப்புறம் கரியமில வாயுவைத்தான் சுவாசிக்கிறோம்.

விடிகாலை நேரத்தில் ஓசோன் அதிகமாக இருப்பதால் ராத்திரி கிடைக்காத பிராணவாயு விடிகாலையில் அதிகமாகக் கிடைக்கிறது. அதனால் சுகமாகத் தூக்கம் வருகிறது.

சரி, அப்படியானால் எல்லாரும் எட்டுமணி நேரம் தூங்கத்தான் வேண்டுமா?

அவசியமில்லை.

தூக்கத்தில் சுவாசிக்கிற அதே ரிதம் பிராணாயாமத்தில் உண்டு.

நான் பிராணாயாமம் கற்றுக் கொண்ட புதிதில் ஆழமில்லாத தூக்கமும், ரொம்ப அதிகாலை எழுந்து விடுகிற பழக்கமும் இருந்தது. ஆனாலும் நாள் முழுக்க புத்துணர்ச்சியோடு இருக்க முடிந்தது.

பிராணாயாமத்தின் சிறப்பை எடுத்துச் சொல்கிற போதெல்லாம்,

“அதெல்லாம் மூட நம்பிக்கைங்க” என்று அதையும் மூட நம்பிக்கையில் சேர்த்து விடுகிற நண்பர்கள் எனக்கு இருக்கிறார்கள்.

நீங்கள் எப்படி?

யாரும் பார்க்கவில்லை என்றால்

ரூமுக்குப் போனதும் பயல்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

விவாதம் கொஞ்சம் முற்றிப் போய் விட்டது. ஜாஸ்தி பேசி விட்டேன்.

நரசிம்மனுக்கு சரக்கு போட்டதும் ஆன்ம விசாரம் அதிகமாகி விடும். கேட்டால் சித்தர்கள் எல்லாரும் கூட இப்படித்தான் இருந்தார்கள். லாகிரி வஸ்துக்கள் பயன் படுத்தாத சித்தரே கிடையாது என்று வாதிடுவான். கெட்டப் பழக்கம் இருக்கிற எல்லாருக்கும் இந்தப் பழக்கமும் உண்டு. ஒவ்வொரு பழக்கத்துக்கும் ஒரு பெரிய மனிஷனை மேற்கோள் காட்டுவார்கள்.

நேற்று ஆதிசங்கரரின் தத்துவத்தை எடுத்துக் கொண்டான்.

‘யாரும் பார்க்கவில்லை என்றால் ஆகாயம் நீலமாக இருக்குமா?’ என்று அவர் கேட்டதை சுட்டிக் காட்டி

“அர்த்தம் புரியுதா?” என்றான்.

“இல்லை”

“ஒருவேளை ஆகாயத்தை யாருமே பார்த்திருக்கா விட்டால் அப்படி ஒன்று இருப்பதே நமக்குத் தெரிந்திருக்காது”

“அப்ப ஆகாயம் இருக்குமான்னுதானே கேட்டிருக்கணும்?”

“நீ ஆகாயம்ன்னு சொல்றதே அந்த நீலத்தைத்தானே? ஆகாயத்தின் நிறம் நீலமா இல்லை அந்த நீலம்தான் ஆகாயமா?”

“டேய், ரெண்டு ரவுண்டுக்கு இவ்வளவுதான் உளறணும்ன்னு ஒரு வரையறை இருக்கு. நீ அதைத் தாண்டறது நல்லா இல்லே”

“எதை உளறல்ங்கிறே?”

“நீ என்ன சொல்ல வர்றே?”

“காண்பவன் இல்லையேல் காட்சி இல்லை. காண்பவனும் காட்சியின் ஒரு அங்கம்”

“அட ராமா, இதுக்கு என்ன அர்த்தம்?”

“ஒரு காட்சியின் எக்சிச்டன்சே காண்பவன் கையில்தான் இருக்கு”

“அதாவது இந்த பாட்டில் இருக்கிறது நீ பாக்கிறதாலேதான்”

“நாம எல்லாரும் பார்க்கிறதாலே”

“நாம பாக்கல்லைன்ன இது இருக்காது?”

“……………………….”

“அதாவது பூனை கண்ணை மூடினா உலகம் இருண்டுடும்ன்னு சொல்வாங்களே..”

“புரியலன்னா புரியலைன்னு சொல்லு. லூசுத்தனமா ஆர்க்யூ பண்ணாதே”

இங்கே ஆரம்பித்தது வினை.

விவாதம் முற்றி, அவன் பக்கம் ரெண்டு பேர், என் பக்கம் ரெண்டு பேர் வசவு பாட்டில் உடைப்பு என்று ரசாபாசம் ஆகிப் போனது. காலையில் எல்லாப் பயல்களும் தூங்கிக் கொண்டிருந்த போதே எழுந்து பர்ஸ்ட் ஷிப்ட் வந்து விட்டேன்.

நான் அறைக்குள் நுழைகிற போது எல்லாரும் உட்கார்ந்து சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். நான் நுழைந்ததையோ உடை மாற்றிக் கொண்டதையோ யாரும் கவனித்ததாகவே தெரியவில்லை.
 
“ஏண்டா, வந்ததுமே ஆரம்பிச்சிட்டீங்களா.. எனக்கொரு கை போடுங்கடா”
 
என் பேச்சு காற்றில் கரைந்தது. ஒரு பயல் காதில் வாங்கினதாகத் தெரியவில்லை.
 
“டேய், நரசிம்மா.. கொஞ்சம் தள்ளி உக்காரு”
 
“……………………….”
 
“டேய், உன்னத்தான்டா… கொஞ்சம் தள்ளி உக்காரு”
 
“பேசறது காதில விழாம அப்படி என்னடா விளையாட்டு…. டேய்”
 
நேரம் ஆக ஆக எனக்கு கடுப்பு ஏறியது.
 
“எவனாவது பதில் சொல்லப் போறீங்களா இலையாடா” என்று இருநூறு டெசிபலில் அலறினேன்.
 
ஒரு ரியாக்ஷனும் இல்லை.
 
பளாரென்று சீனியின் முதுகில் அறைந்தேன்.
 
“அய்யோ அம்மா” என்று அலறிக்கொண்டு எழுந்தான்.
 
“இதுக்கு முதல்லையே பதில் சொல்லியிருக்கலாமில்லே?” என்று நான் கேட்டுக் கொண்டிருந்ததை அவனோ, மற்றவர்களோ கவனித்ததாகத் தெரியவில்லை.
 
“என்னடா ஆச்சு?” என்றார்கள் சீனியைப் பார்த்து.
 
“யாரோ அடிக்கிற மாதிரி இருக்குடா” சீனியின் பார்வை என் தோள் பட்டை வழியாக வெட்ட வெளியில் எங்கோ பார்த்தது. 
 
என்னது… யாரோ அடிக்கிற மாதிரியா…
 
அப்படி என்றால்.. அப்படி என்றால்..
 
கையைக் கிள்ளிப் பார்த்தேன், வலித்தது. 
 
தொம் தொம் என்று நடு வீட்டில் குதித்தேன்.
 
“இங்க பாருங்கடா.. இங்க பாருங்க.. நான்.. நான்.. நாராயணன் இங்கே நிக்கறேன்”
 
அவர்கள் எதுவுமே நடக்காத மாதிரி ஆட்டத்தை தொடர்ந்தார்கள்.
 
அப்படியே லுங்கி, பனியனுடன் ரோட்டில் தாறுமாறாக ஓடினேன். மூச்சிறைக்க ஓடி மாத்யூ டாக்டரின் கிளினிக்கில் புகுந்தேன். காத்தருந்த பேஷன்ட்களை கவனிக்காது புயல் மாதிரி அவர் அறைக்குள் பிரவேசித்தேன்.
 
“டாக்டர் உங்க முன்னாலே நான் இருக்கேனா” என்று அலறினேன்.
 
நாக்கை நீட்டி ‘ஆ’ சொல்லிக் கொண்டிருந்த நோயாளி அங்கேயே ஒன்றுக்குப் போய் விட்டான். டாக்டர் சரேலென்று பின் வாங்கி ஒரு பாதுகாப்பான மூலையில் ஒதுங்கினார்.
 
பின்னால் காலடிச் சத்தங்கள் கேட்டன.
 
“என்ன மிஸ்டர் நரசிம்மன், நாராயணனுக்கு டிரக் பழக்கமெல்லாம் ஆரம்பிச்சிடுச்சா?”
 
“இல்லை டாக்டர், காண்பவன் இல்லையேல் காட்சி இல்லைங்கிறதை டெமான்ஸ்ட்ரேட் பண்ணிக் காட்டிகிட்டிருந்தோம். அது கொஞ்சம் ஓவராயிடிச்சு”

சொல்லத்தான் நினைக்கிறேன்…

சொன்னது : அதைத்தான் பார்த்துகிட்டு இருக்கேன்
சொல்ல நினைத்தது : அதை இன்னும் பார்க்கக் கூட இல்லை

சொன்னது : நாளைக்கு முதல் வேலையா……
சொல்ல நினைத்தது : சாமி சத்தியமா இன்னைக்கு முடியாது

சொன்னது : நாங்க சொன்னதிலே ஒரு சின்ன கம்யூனிகேஷன் பிழை
சொல்ல நினைத்தது : புளுகிட்டோம், மன்னிச்சிடுங்க.

சொன்னது : நிச்சயமா நம்மாலே முடியும்
சொல்லநினைத்தது :அத்தனை எளிதா முடிக்கிற சமாச்சாரமில்லை.

சொன்னது : சரியான ரூட்டிலே போய்கிட்டிருக்கோம். டார்கெட் தேதியை மட்டும் கொஞ்சம் தள்ளி வெச்சாப் போதும்.
சொல்ல நினைத்தது : புராஜக்ட் நாசமாய்ப் போய் விட்டது. செத்தாலும் கம்மிட் பண்ண மாதிரி முடிக்க முடியாது.

சொன்னது : எங்களுக்குள்ளே ஒரு சின்ன கருத்து வேறுபாடு
சொல்ல நினைத்தது : நடந்த சண்டையிலே டிபார்ட்மென்டே நாறிப் போச்சு. செக்யூரிட்டியை விட்டு விலக்கல்லைன்னா அவனை அண்டர் வேரோடு ஓட விட்டிருப்பேன்.

சொன்னது : நீ என்ன எல்லாம் பண்றேன்னு ஒரு லிஸ்ட் போடு. உனக்கு எப்படி ஹெல்ப் பண்ண முடியும்ன்னு பாக்கலாம்
சொல்ல நினைத்தது : அப்டி என்ன பெருசா புடுங்கறேன்னு பார்க்கலாமே.

சொன்னது : நிஜமான காரணம் என்னன்னு பார்க்கணும்
சொல்ல நினைத்தது : நீ எங்கே சொதப்பிநேன்னு சொல்றேன்

சொன்னது : நாங்க ஒரு டீமா இதை செய்தோம்
சொல்ல நினைத்தது : என்னை மட்டும் குறை சொல்றதிலே அர்த்தமில்லை

சொன்னது : இது நல்ல கேள்வி
சொல்ல நினைத்தது : இதப்பத்தி எனக்கு ஒரு இழவும் தெரியாது

சொன்னது : வாழ்த்துக்கள்
சொல்ல நினைத்தது : செத்தடா

தமிழனின் கண்டுபிடிப்பு உலகம் முழுதும்…

Necessity is the mother of inventions என்பதைக் கேள்விப் பட்டிருப்பீர்கள்.

அப்படி மனிதன் எந்தெந்தத் தேவைகளுக்காக என்னென்ன கண்டு பிடித்தான் என்று இரண்டு உதாரணங்கள் சொன்னால் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும்.

மனிதன் மிருகங்களை வேட்டையாடி தின்றான் என்பது நமக்குத் தெரியும். வேட்டையாடுவதில் எளிய, திறமையான வழிகளை எப்படிக் கற்றான் தெரியுமா?

ஆரம்ப காலத்தில் மிருகங்களைத் துரத்திச் சென்று கல்லால் அடித்துக் கொன்றுதான் மனிதன் தின்றான். அப்படி ஒரு முறை துரத்தும் போது ஒரு மிருகம் கூரான ஒரு மரக்கிளையில் குத்திக் கொண்டு இறந்திருக்கிறது. அதற்கப்புறம் கூரான மரக்கிளைகளை மிருகங்கள் மீது தூக்கி எறிந்து கொன்றிருக்கிறார்கள். மரக்கிளைகளின் முனை உடைகிற போதும், அவை மழுங்கிப் போனபோதும் புதுப் புது கிளைகளைத் தேட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஒரே ஆயுதத்தை பல முறை உபயோகிக்க வேண்டிய அவசியம் வந்த போது உலோகத்தில் செய்த ஈட்டிகள் கண்டு பிடிக்கப் பட்டன.

அதே போல பச்சை மாமிசத்தைத் தின்றவன் எப்போது அவித்த மாமிசத்தைத் தின்றான் தெரியுமா?

ஆடுகள் கட்டி வைத்திருந்த கொட்டகை ஒன்று தீக்கிரையானது.

“ஐயய்யோ ஆடெல்லாம் போச்சே” என்று ஒரு ஆட்டைத் தொட்ட போது சூட்டில் விரல் பொசுங்கி இருக்கிறது.

கை சுட்டால் உடனே மனிஷன் ரிப்லேக்சில் என்ன செய்வான்?

டக்கென்று வாயில் வைத்து சூப்பி இருக்கிறான். வெந்து போன ஆட்டின் சதை வாயில் வைத்ததும் புதுச் சுவையை உணர்த்த, மிருகங்களின் சதையை அவித்துத் தின்கிற பழக்கம் வந்திருக்கிறது.

இதெல்லாம் பழசு.

நம்ம ஊர்க்காரர்கள் செய்த ஒரு முன்னேற்றம் உலகெங்கும் இன்று பின் பற்றப் படுகிறது.

மழைக்காலங்களில் தீப்பெட்டியைக் கொளுத்த ஜனங்கள் பட்ட பாடு உங்களில் பலருக்குத் தெரிந்திருக்காது.

தீக்குச்ச்யைப் பற்ற வைக்க உராய்வுதான் பிரதானம் என்பதைக் கண்டறிந்து, ஈரமானாலும் உராய்வு கெடாத ப்ரிக்ஷன் ஸ்பாட் தீப்பெட்டியை உலகில் முதலில் செய்தவர்கள் நம் விம்கோ நிறுவனத்தினர்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?

புரமோஷன் வாங்க ஏழு ஐடியாக்கள்

1. மேசையை எப்போதும் களேபரமாக வைத்திருங்கள். ஐந்தாறு பைல்கள் திறந்து கிடக்க வேண்டும். நடுவில் பேனாவைத் திறந்து போட்டிருக்க வேண்டும். மேசையின் இழுப்பறைகள் பாதி திறந்திருக்க வேண்டும். சாவி தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

2. போனில் உரக்க பேசுங்கள். ‘ஐ சிம்ப்ளி கேன்னாட் டாலரேட் தட்’,டுமாரோ வில் பீ டூ லேட்’, என்கிற மாதிரி வாக்கியங்களை அழுத்தம் திருத்தமாக உச்சரியுங்கள். ஆங்காங்கே கொஞ்சம் ஹிந்தி, மலையாளம் கலந்து பேசுவது குணச்சித்திரத்தை மேம்படுத்தும். எதிராளியைக் காய்ச்சி வடிகட்டுற மாதிரி பேசுங்கள். இதைச் செய்கிற போது எதிர் முனையில் போன் வைக்கப் பட்டுவிட்டது என்பதை நிச்சயித்துக் கொண்டு செய்வது உடம்புக்கு நல்லது.

3. அலுவலகத்துக்குள் எப்போது நடந்தாலும் ஏதோ தீ விபத்து நடந்து விட்டது மாதிரி வேகமாக நடங்கள். நீங்கள் போவது காண்டீனுக்கு மசால் வடை சாப்பிடவோ அல்லது கார்டனிங் இல் வேலை செய்யும் பெண்ணை சைட் அடிக்கவோ கூட இருக்கலாம்.

4. மேற்சொன்ன தீ விபத்து நடைகளின் போது கையில் எப்போதும் ஒரு பைலோ, ரிஜிச்தரோ வைத்திருங்கள். அது காலி பைலாகவோ, அந்த ரிஜிஸ்தர் உங்கள் மகனின் மேப் டிராயிங் நோட்டாகவோ கூட இருக்கலாம்.

5. சாயந்திரம் ஐந்தரைக்குப் பிறகு உங்கள் பாசின் கேபினுக்கு முன்னால் குறுக்கும் நெடுக்கும் சும்மாவாவது நடங்கள்.

6. ஒரு வேளை அவர் ஏற்கனவே கிளம்பியிருந்தால் அவர் நம்பருக்கு போன் செய்து உப்புப் பெறாத விஷயம் எதற்காவது ஐடியா கேளுங்கள். ‘ஆர் யு ஸ்டில் இன் தி ஆபிஸ்?’ என்று கேட்க வையுங்கள். அதற்கு பதிலாக, ‘யுஷுவலா கிளம்பற நேரமே இன்னம் வரல்லை சார்’ என்கிற ரீதியில் பதில் சொல்லுங்கள்.

முடிந்தால், ‘கேசவன் வேறே இன்னைக்கு வரல்லையா, நாளைக்கு ஆடிட் இருக்கே… என்கிற மாதிரி யாரையாவது டிப்ளமேடிக்காக போட்டுக் கொடுங்கள்.

7. அடுத்த நாள் பாசுடன் பேசும் போது சம்பந்தமே இல்லாமல் ‘நேத்து கூட சாயந்திரம் ஆறரை மணி இருக்கும், வெப் இந்தியா ஆளுங்க போன் பண்ணாங்க’ என்கிற மாதிரி அப்டேஷன்கள் கொடுங்கள். ஆறரை, ஏழு என்கிற இடங்களில் இழுத்து இழுத்து பேசுங்கள்.

இந்த ஏழு ஹாபிட்களும் ஸ்டீபன் கோவே சொன்ன செவன் ஹாபிட்ஸ் ஐ விட ரொம்பவும் சக்தி வாய்ந்தவை!

எம்.ஜி.ஆர். என்கிற தமிழ் ரசிகர்

எம்.ஜி.ஆர். என்கிற மூன்றேழுத்துக்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை.

அதற்கு காரணங்கள் பல.

அவற்றில் ஒன்று அவர் படத்தில் வந்த கவி நயம் மிக்க பாடல்கள்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்.

இதோ அந்த ஒரு சோறு:

பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண்பனி போகும் நிலவே நில்
என்மனத் தோட்டத்து வண்ணப் பறவை
சென்றது எங்கே சொல்

என்று ஆரம்பித்து

முன்னம் என் உள்ளத்தில்
முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடமெங்கே

கிண்ணம் நிரம்பிய செங்கனிச் சாறுண்ண
முன்வந்த பொன்னந்தி மாலைஎங்கே

என்று முதற்சரணமும்

தென்னை வனத்தினில்
உன்னை முகந்தொட்டு
என்னத்தை சொன்னவன் வாடுகிறேன்

உன்னிரு கை பட்டு
புண் பட்ட நெஞ்சத்தில்
உன் பட்டுக் கை படப் பாடுகிறேன்

என்று அடுத்த சரணமும்

வருகிற பாட்டில்

என்னடா சிறப்பு என்பீர்கள்….

இந்தப் பாடல் வல்லின மெல்லின இடையினத்தின் ஆபத்தான தொகுப்பு.

ஏன் ஆபத்து என்று சொல்கிறேன் தெரியுமா?

வல்லின, மெல்லின, இடையினங்கள் ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் மாறுபட்டால் மட்டுமே உச்சரிப்புக்கு சௌகர்யமாக இருக்கும். அந்த சௌகர்யம் இந்தப் பாட்டில் இல்லை. இதைச் சரியாக உச்சரித்த டி.எம்.எஸ். க்கு ஹாட்ஸ் ஆப்.

எங்கே இந்தப் பாட்டைச் சரியான உச்சரிப்பில் பாடி பதிவு செய்து யாராவது அனுப்புங்கள் பார்ப்போம். அவர்களுக்கு செந்தமிழ் வித்தகன் என்கிற பட்டத்தை வழங்குவோம்!

சரி, இதை நான் சரியாக உச்சரித்திருக்கிறேனா என்று பார்க்க கீழே உள்ள ஒலிக் கோப்பை கேட்டுப் பாருங்கள்.

குறிப்பு: ஒரு சின்ன கூதல் செய்திருக்கிறேன். இந்த கோப்பை சேவ் செய்து விட்டு எக்ஸ் டென்ஷனை ஜெபிஈஜி க்கு பதில் எம்பீத்ரீ யாக மாற்றி விட்டு இன்வோக் செய்யுங்கள். கணினியை ஏமாற்றுகிற இந்த அல்ப்ப முயற்சி வேலை செய்கிறதா பார்ப்போம்.

ரைட் க்ளிக் செய்து செவ் டார்கெட் அஸ் போட்டு சேமியுங்கள். டோன்ட் ஷோ எக்ஸ் டென்ஷன் பார் நோன் பைல்ஸ் என்கிற ஆப்ஷனை வியூவில் அன்செலக்ட் செய்யுங்கள். எக்ஸ் டென்ஷன் தெரியும். அதை எம்பீத்ரீ யாக மாற்றுங்கள்.