2009 தமிழ் சினிமா – ஒரு பார்வை

2009 ல் சுமார் அறுபத்தைந்து தமிழ் படங்கள் வந்திருக்கின்றன என்று அறிகிறேன்.

இதில் ஒரு ஐந்தாறு தவிர எதுவும் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை என்பது என் தாழ்மையான கருத்து. நான் ரசித்த படங்களைப் பற்றி இரண்டொரு வார்த்தை பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.

படிக்காதவன் : பாக்யராஜுக்குப் பிறகு தனக்கு பொருத்தமான கதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிற திறமை தனுஷுக்கு இருக்கிறது. அப்பாவும் பிள்ளையும் டாம் அண்ட் ஜெர்ரியாக இருக்கிற கதைகளை ஏறக்குறைய ஸ்டாண்டர்ட் செய்து விட்டார். ஆனாலும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. மாமனார் பாணியிலேயே விவேக்கிற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். ‘பாக்கப் பாக்கத்தான் பிடிக்கும்’ டையலாக்கிற்குப் பிறகு தமன்னாவை அழைத்து ‘ஹலோ, ஐ லவ் யு’ என்று சொல்லும் போது தமன்னா ‘அய்யோ’ என்று தலையில் மொத்திக் கொள்வது நான் ரொம்ப ரசித்த காட்சி.

வெண்ணிலா கபடிக் குழு : ரொம்ப யதார்த்தமாக சொல்லப் பட்ட கதை. கில்லிக்கு அப்புறம் கபடி எல்லாரையும் பிடித்து வாட்டுகிறதோ என்று தோன்றுகிறது. ஆனாலும் சுவாரஸ்யம். கபடி டிரைனர் நடிப்பு பிரமாதம். பரோட்டா காமெடி (நான் மறுபடி மொதல்லேர்ந்து சாப்பிடறேன்) ரொம்ப ரசனை. காதல் வந்ததும் கதாநாயகன் மனதில் உண்டாகும் மாற்றங்களைச் சொல்கிற ஒரு பாட்டில் ‘கொடியில் காயும் கோவணம் கூட வான வில்லாய்த் தெரிகிறதே’ என்கிற வரி ரொம்ப ரசித்தது. விநாயக்ராம் பேரன் என்பதாலோ என்னவோ பாட்டுக்களிலும் ரீரேகார்டிங்கிலும் கடம் டாமினேட் செய்த மாதிரி தோன்றியது. கதாநாயகனைச் சாகடித்திருக்க வேண்டாம்.

அயன் : மசாலாதான் என்றாலும் கடத்தல் நுணுக்கங்களை ஆர்த்தர் ஹெய்லியின் ஏர்போர்ட் பாணியில் சொல்லியிருந்தது ரசனை. வெளிநாடு என்றாலே இந்தியாவை விட உசத்தி என்கிற எண்ணம் தரும் காட்சிகளாகவே எல்லாரும் காட்டும் போது, அழுக்கு, அநாகரீகம், பஞ்சம், கேடித்தனம், ஆபத்துக்கள் இதையெல்லாம் வெளிச்சமிட்டுக் காட்டிய ஆனந்துக்குப் பாராட்டுக்கள். பாடல் காட்சிகள் படமெடுத்த விதம் அருமை. தமன்னாவின் ஸ்பெஷல் சிரிப்பையும், வெட்கமான தலையாட்டல்களையும் அற்புதமாகக் கேப்சர் செய்ததற்கு உபரிப் பாராட்டுக்கள். இசை ஏமாற்றம், ஆனால் ஒளியின் டெக்னிகல் ஆஸ்பெக்ட்ஸ் பிரமாதம். திருட்டு சிடி விற்கிறவன் கான்வாஸ் செய்கையில் சத்தம் பக்கத்து சீட்டிலிருந்து கேட்கிறது!

பசங்க : இது பற்றி தனியாக ஒரு இடுகையே போட்டாகி விட்டது. இந்தப் படத்தின் சிறப்பாக நான் கருதுவது இரண்டு விஷயங்கள். முதலாவது அந்த ஆசிரியர் பாத்திரம். ஆசிரியராக பையனை வகுப்பில் இடித்துரைப்பதும், அப்பாவாக வீட்டில் ஊக்குவிப்பதுமாக முரண்பாட்டை அழகாகக் காட்டியிருக்கிறார்கள். அடுத்தது குழந்தைகளை பிஞ்சில் பழுத்ததாகக் காட்டாமல் குழந்தைகளாகவே காட்டியிருப்பது. இதை நம் சோ கால்ட் பெரிய டைரக்டர்கள் யாருமே இதுவரை செய்ததில்லை.
 
ஈரம் : ரொம்ப சுவாரஸ்யமாக சொன்ன டிடெக்டிவ் கதை. பேய் வந்து க்ளூ கொடுக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
 
திரு திரு துரு துரு : ரொம்ப சாதாரணமான கதை. திரைக் கதையின் சுவாரச்யத்தால் மனதை அள்ளி விட்டது. ரொம்ப கௌரவமாக, ஆபாசமில்லாமல் காதல் மலர்வதைக் காட்டியிருக்கிறார்கள். குழந்தையின் அம்மாவைத் தேடும் போது கதை ரொம்ப வேகமாக நகர்கிறது. கில்லிக்குப் பிறகு நான் முழு மார்க் கொடுக்கும் திரைக்கதை. அந்தக் கதாநாயகி அருமையான தேர்வு. (கொஞ்சம் ஷோபனா ஜாடையோ?)  நடிகைத் தனமே இல்லாத தோற்றம். நட்பு காதலாக பரிணமிப்பதை ரொம்ப இயற்கையாகச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அந்த மாற்றத்துக்கு பிறகும் ரெண்டு பேரும் ஈஷிக் கொள்வதில்லை.
 
மன்னிக்கவும். வேறெந்தப் படமும் என்னைக் கவரவில்லை. நாடோடிகள் பார்க்கவில்லை.

27 comments

  1. நல்ல படங்கள் மட்டுமே பார்த்தால் தப்பிச்சிருக்கீங்க சார்.. அந்த திருதிரு-துறுதுறு பத்தியில் ஸ்பெல்லிங் கொஞ்சம் பார்த்தீங்கன்னா(கிள்ளி, ரெண்டு பெரும்)…

    ஹாப்பி நியூ இயர் சார்.. 🙂

  2. நல்ல தேர்வு….நாளைக்கு டிவி பாக்க மறக்காதீங்க. ஏன்னா எல்லா channel லையும் ஒரே மாதிரி நிகழ்ச்சிதான் போடுவாங்க, சிறந்த 10 பாடல்கள், சிறந்த 10 படங்கள், உலகம் 2009, இந்திய 2009. ஒரே வித்தியாசம் பசங்க மாதிரி நல்ல பாடங்கல ஒப்புக்கு பாராடிட்டு அந்தந்த தொலைக்காட்சி தயாரித்த படங்களத்தான் சிறந்த படங்கள் பட்டியல்ல இருக்கும். மாசிலாமணி, கண்டேன் காதலை, வேட்டைக்காரன் இதெல்லாம் தான் சன் டிவி rating ல இருக்கும்…..
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்…..

    1. நன்றி ரேவதிஜி, உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள். சிறப்பா அந்த குட்டி பையனுக்கு! அவனோட பிறந்த தேதி என்ன? (இது குறித்து எனக்கொரு அனுமானம் இருக்கு. அதை இப்ப சொல்ல மாட்டேன். நீங்க சொன்னப்புறம்தான் சொல்வேன்)

  3. உன்னைப்போல் ஒருவனாக(ஆக) முடியாவிட்டாலும் என்னைப்போலல்லாது ஆராய்ந்து அருமையான படங்களை தந்திருப்பது மிக நன்றாயிருந்தது…
    (ம்…. முடியல)

  4. ம்ம்ம்ம்… நல்ல தேர்ந்து எடுத்து போட்டுருக்கீங்க.. நானும் பார்த்துட்டேனே… ஏதே சில படம் மிஸ் ஆகுறமாதிருக்கு… பட் என்னன்னு தெரியலை. 😦

    சரி இந்த லிஸ்ட்ல ஏன்… திரு திரு துரு துரு???

    இதுக்கு ஏதாவது ஏழைரையை கூட்டிராதிப்பா…. 😀

  5. கடைசியாக வந்த குமுதம் பார்த்தீர்களா… அரசு பதில் படித்தீர்களா…இதயம் பேத்துகிறது பகுதியில் படித்த வகுத்தல் கணக்கு ஜோக் வரிக்கு வரி அப்படியே வந்திருக்கிறதே…நீங்கள் குமுதம் ஆசிரியர் குழுவில் ஒருவரோ…?

    1. பரட்டை, உங்க சந்தேகம் நியாயமானதுதான். எனக்கே தூக்கத்தில் நடக்கிற வியாதியோ, ட்யூயல் பர்சனாலிட்டி சீக்கோ இருக்கோன்னு சந்தேகம் வருது. நாட்டுப்பாடல்களையும், பெரிய தமிழ் இலக்கியங்களையும் யார் வேணா பயன்படுத்தலாம். அது மாதிரி உயர்ந்த நிலைக்கு நம்ம எழுத்தைக் கொண்டு போய்ட்டாங்க!

  6. இன்னும் சில படங்கள் கூட நன்றாக இருந்தன. உதாரணத்துக்கு ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘மதுரை தேனி…..’, ஆனந்த தாண்டவம் இதையெல்லாம் சொல்லலாம். படங்கள், அதைப் பார்க்கிற போது நாம் இருக்கும் மூடிப் பொறுத்துதான் நல்லதாகவோ, கெட்டதாகவோ அமைகின்றன. ஆனாலும் பெரும்பாலும் உங்க சாய்ஸ் ஓக்கே.

    அது சரி, ஸ்ரீராம் சொன்னப்புறம்தான் நானும் பார்த்தேன்.

    அந்தக் காலத்தில எல்லாரும் குமுதத்தை காப்பி அடிச்சாங்க, இப்போ?

  7. இதுல ஒரு படம் கூட நான் பார்க்கல. ஆனா, அயன் படம் ஒரு ஸ்பானிஷ் பட உல்டா’னு தெரியும். நம்ம ப்ளாக் படிச்சு பாருங்க அந்த படத்த பத்தி கூட எழுதிருக்கேன்.

    Wishing you and you family a very happy, colorful new year. Keep going with ur adventures and comedies!! 🙂

  8. ஜவகர் அவர்களே…
    நீங்கள் தேர்வுக்கு எடுத்துக்கொண்ட திரைப்படங்கள் அத்தனையும் தரமான திரைப்பட ரசிகர்களுக்கு தேர்வானவையே.
    குறிப்பாக “திருதிரு துறுதுறு”. பெண்களைக் கொச்சைபடுத்தாமல் ஒரு அழகான காதலை இயக்குனர் வெளிப்படுத்திய விதம்…அந்தப் பெண் நடிகை தேர்வும் சரியான தேர்வே. அந்தப் பெண்ணின் கண்களிலும் ஒரு துறுதுறு இருந்ததே…என்னையும் கிறுகிறுக்க வைத்தது. மேலும் உஷா ராஜதுரை அவர்களின் பார்வையில் குறிப்பிட்ட “மதுரை தேனீ” கதையிலும் கதை சொன்ன விதத்திலும் இயக்குனர் ரசிகர்களிடம் வெற்றி பெற்றிருக்கவேண்டும…வெற்றி பெற்றிருப்பார்.

  9. ’பேராண்மை’யை விட்டுட்டீங்களே!

    ராக்கெட் தளத்தின் அருகாமை பகுதிகளில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பது போல காட்டுவது, மிதமிஞ்சிய கதாநாயகனின் பொதுஅறிவு ஆகிய (சிறு) குறைகள் இருந்தாலும் நல்ல படமாக தோன்றியது..

    கார்த்திகேயன்
    http://kaaranam1000.blogspot.com

  10. அகம் மகிழ்ந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    //தமன்னா ‘அய்யோ’ என்று தலையில் மொத்திக் கொள்வது நான் ரொம்ப ரசித்த காட்சி.//

    //தமன்னாவின் ஸ்பெஷல் சிரிப்பையும், வெட்கமான தலையாட்டல்களையும் அற்புதமாகக் கேப்சர் செய்ததற்கு உபரிப் பாராட்டுக்கள்//

    ‘தமன்னா’விற்காக ‘தமன்னா’ நடிச்ச இரண்டு படத்திற்கும் ‘தமன்னா’ படத்தோட விமர்சனம் எழுதிய
    ‘தமன்னா’வோட தீவிர ரசிகர் திரு.ஜவர்லால் அவர்களுக்கு சீக்கிரம் தமன்னாவோடு ஒரு டின்னர் (மட்டும்)சாப்பிட வாய்ப்பு கிடைக்க வாழ்த்துக்கள். 🙂

    1. ராஜா, வாழ்த்துதானே, அதில என்ன இத்தனை கண்ட்ரோல்! பரவாயில்ல. லஞ்ச்ன்னு சொல்லாம டின்னர்ந்னு சொன்னீங்களே.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!