ஜெயகாந்தனும் பரமாச்சாரியாரும்

ஞானிகளுக்கும் “நட்” களுக்கும் மயிரிழை வித்யாசம்தான்.

உலகின் புராதனத் தொழில் ஆதி காலத்திலிருந்தே கல்கத்தாவில் பிரபலம். ராமகிருஷ்ண பரமஹம்சர் தெருவில் போகும் வேசிகளுக்கு நெடுஞ்சான் கிடையாக நமஸ்கரிப்பாராம். காளி ஸ்வரூபத்தை இவளில் என்னால் காண முடிகிறது என்பாராம். இதை ஞானிகளும் புரிந்து கொள்ளலாம், நட்களும் புரிந்து கொள்ளலாம். நம்மால் முடியாது.

தாழ்வில் உயர்வைப் பார்க்கிற மனப் பக்குவத்தை பரமாச்சாரியார் ஒருதரம் சொல்லியிருக்கிறார்.

நம்மைக் காட்டிலும் உயர்வாக இருக்கிறவர்களை குருவாக ஏற்றுக் கொள்வது எல்லாருக்கும் எளிது. ஆனால் அதில் மமதை இருக்கிறது. மமதை இருந்தால் கடவுளை உணர முடியாது. எப்போது உன்னை விட உயர்வு இல்லாதவனை குருவாக ஏற்றுக்கொள்கிறாயோ அப்போது உன் மமதை விலகுகிறது. உன்னால் கடவுளைப் பார்க்க முடியும், என்கிறார் அவர்.

இன்னும் நன்றாகப் புரிய வேண்டுமானால் ஜெயகாந்தனின் “குரு பீடம்” சிறுகதை படியுங்கள்.

கஞ்சா இழுத்து விட்டுப் பேசுகிறாரோ என்று எண்ண வைக்கிற மாதிரி ஆதிசங்கரர் ஒரு கேள்வி கேட்கிறார்.

“யாரும் பார்க்கவில்லை என்றால் ஆகாயம் நீலமாக இருக்குமா?”

ஒரு சின்ன உதாரணம்.

இன்று இரவு எல்லாரும் தூங்கின பிறகு மழை பெய்கிறது. விடிவதற்குள் ஈரம் முழுக்கக் காய்ந்து விடுகிறது. அந்த மழை பெய்தது யாருக்காவது தெரியுமா? நேற்று மழை பெய்ததா என்று யாரைக் கேட்டாலும் இல்லை என்றுதான் சொல்வார்கள். அல்லது தெரியாது என்று சொல்வார்கள். அப்போது இந்த உலகத்தைப் பொறுத்த வரை அப்படி ஒரு மழையே பெய்யவில்லை.

அப்போது என்ன தெரிகிறது?

ஒரு காட்சி அங்கீகரிக்கப் பட காண்பவர்கள் தேவைப் படுகிறார்கள்.

காண்பவனும் காட்சியின் ஒரு அங்கம்.

காண்பவன் இல்லையேல், காட்சி இல்லை.

ஜெயகாந்தன் எழுதின குரு பீடம் மாதிரி இந்தத் தத்துவத்தை விளக்க ஒரு கதை எழுதும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது.

அதை வேறொரு சந்தர்ப்பத்தில் உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

13 comments

  1. பல ஆண்டுகளுக்கு முன், மும்பை தமிழ் சங்கத்தில் ஜெயகாந்தனின் பேச்சை கேட்கும் சந்தர்ப்பம் கிட்டியது. பேச்சின் நடுவே அவர் கூறியது, “ நான் காஞ்சி சங்கராச்சாரியரையே மறுத்திருக்கிறேன். பிறகு ஒரு நாள் நான் அவரை சந்தித்தபோது, என்னை ஏன் மறுத்தாய் என்று அவர் கேட்கவில்லை… பெரியவர், அப்படிக் கேட்டிருந்தால் நான் அவரை விடப் பெரியவராகியிருப்பேன்…” இப்போ யாருக்கு மமதை அதிகம்..? ஜெயகாந்தனுக்கா, சங்கராச்சாரியாருக்கான்னு நமக்குப் புரியலீங்கோ….

  2. எல்லா சக ஜீவன்களையும் சமமாக பாவித்து வணங்கினால் சரி என்று படுகிறது, ஆனால் தேர்ந்தெடுத்து ஒரு வேசியை மட்டும் வணங்குவதில் எந்த வித சாமார்த்தியமும் எனக்கு புலப்படவில்லை. ஒரு பிச்சைக்காரன், ஒரு தொழு நோயாளி, ஒரு மன்னன், மன நிலை சரியற்றவன் என்று எல்லாரையும் வணங்கி அவர்கள் எல்லோரிடமும் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம் என்ற மனப்பக்குவம் வந்தால் சரி தான். ஆனால் இந்த கும்பிடுக்கு என்ன அர்த்தமோ?

  3. ஞானிகளும் புரிந்து கொள்ளலாம், நட்களும் புரிந்து கொள்ளலாம். நம்மால் முடியாது…இப்போது புரிகின்றதா சகோதரர் அருண்!

  4. //நம்மைக் காட்டிலும் உயர்வாக இருக்கிறவர்களை குருவாக ஏற்றுக் கொள்வது எல்லாருக்கும் எளிது. ஆனால் அதில் மமதை இருக்கிறது. மமதை இருந்தால் கடவுளை உணர முடியாது. எப்போது உன்னை விட உயர்வு இல்லாதவனை குருவாக ஏற்றுக்கொள்கிறாயோ அப்போது உன் மமதை விலகுகிறது//

    பெரியவர் சொன்னதைக் கேட்டு நடக்க பெரியமனம் வேண்டும்.

  5. //ஞானிகளும் புரிந்து கொள்ளலாம், நட்களும் புரிந்து கொள்ளலாம். நம்மால் முடியாது…//
    எனக்கு எல்லாம் புரியுதுன்னு நெனைச்சிகிட்டு இருந்தேன். நான் ஞானியா நட்டான்னு தான் புரியல!

  6. பரமாசாரியார் எதையும் எளிதாகவும் நன்றாகப் புரியும்படியும் சொல்வதில் வல்லவர். தெய்வத்தின் குரல் படித்தாலே போதும். முதுமையில் புரியும் அளவிற்கு இளமையில் புரிந்து கொள்வது மிகவும் குறைவுதான் என்பது என் அபிப்ராயம்.

    1. நன்றி சார். தெய்வத்தின் குரல் முழு மூச்சாகப் படித்ததில்லை. அவ்வப்போது கொஞ்சம் படிப்பேன். விவாதத்துக்குரிய சில விஷயங்கள் கூட சொல்லியிருக்கிறார். அவைகளை அவ்வப்போது, விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளலாமா என்று ஆவல்.

  7. விவாதம் செய்யும் அளவிற்கு எனக்கு போதாது. படிக்கும் போது எந்த அளவிற்கு புரிகிரதோ அதையே ஞாபகம் வைத்துக் கொண்டால் அதுவே பிரமாதம் என்று நினைக்கும் மனநிலையா அல்லது வயதா? படிப்பதற்கு எல்லாம் பிடிக்கும். அவ்வளவே.

  8. //காண்பவன் இல்லையேல், காட்சி இல்லை.
    கண்டவன் இருந்தும்…
    காட்சிகள் இல்லை…
    இலங்கையில்…..

  9. சார்,

    “யாரும் பார்க்கவில்லை என்றால் ஆகாயம் நீலமாக இருக்குமா?” என்ன ஒரு கேள்வி, எண்ண வரி.

    ‘சிறந்த பதிவுகள்’ ல இருந்தத பார்த்துவிட்டு, இந்த இடுகைக்கு வந்தேன். இவ்ளோ முதிய இடுகை திடிர்னு இப்பொ ஃபேமஸ் ஆகிருக்குனு வியப்பு.

    அப்புறம் இந்த அள‌வுக்கு இல்லாட்டியும் நாமளும் கொஞ்ஞானியோ அல்லது கொஞ்’நட்’டோ ஆகியிருக்கிறோம் போலன்னு தோண்றியது.

    அது இங்க,
    http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.in/2012/08/blog-post_31.html

எதுவா இருந்தாலும் எழுதுங்க!