மடையன் என்றால் மேதாவி

மடையன் என்றால் முட்டாள் என்றுதான் எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் மடையன் என்கிற பதத்துக்கு சமையல்காரன் என்று ஒரு பொருள் உண்டு. ‘அடு மடையா’ என்று சமையல்காரனை சுட்டுவது போல ஒரு வரி நள வெண்பாவில் வரும்.(நம்பி சார், முழு செய்யுள் தெரிந்தால் சொல்லுங்களேன்)

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி மடையன் என்றால் மேதை என்று பொருள் கொள்ள வைத்து விட்டது.

கல்யாண வீட்டில் எல்லாரும் தூங்கியிருந்தார்கள். நான் மட்டும் கொட்டு கொட்டென்று விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

“என்ன, அண்ணாவுக்கு ஆபிஸ்லே எதோ பிரச்சினை போலிருக்கு” என்று வெற்றிலையை மென்றபடி அருகே வந்து உட்கார்ந்தார் ஹெட் கூக் நாராயணய்யர்.

எனக்குக் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.

“அதெப்படி, ஆபிஸ்லே ன்னு சரியாச் சொல்றீங்க?”

“கல்யாண வீட்டிலே தூங்காம இருக்கிறது சாதாரணமா மூணு பேர்தான். ஒண்ணு பொண்ணோட அப்பா. ஒண்ணு வாட்ச் மேன். அதுக்கப்புறம் சமையல்காரன். நீங்க ஆட் மேன் அவுட். அதனாலேதான் கேட்டேன்”

நாராயணய்யர் அந்தக்காலத்து இ எஸ் எல் சி. கொஞ்சம் இங்கிலீஷெல்லாம் பேசுவார்.

“அது சரி, பிரச்சினை வீட்டிலே கூட இருக்கலாமே. எப்படி ஆபிஸ் ன்னு சொன்னீங்க?”

“ரொம்ப ஈசிண்ணா, நீங்க மாமியோடையும், பசங்களோடையும் பேசிகொண்டிருந்த ஸ்டைலை வெச்சிப் பார்க்கிறப்போ பிராப்ளம் ஆத்திலே இருக்க முடியாது”

“ரொம்ப கவனிக்கறீங்க நாராயணய்யர்”

“இல்லையா பின்னே, ஒருத்தன் முழிக்கிற முழியிலேயே இடுப்பிலே கட்டின்டிருக்கிறது சக்கரையா, முந்திரிப் பருப்பான்னு சொல்வேன் ஓய். என்ன பிரச்சினைன்னு சொன்னா என்னாலே எதாவது ஹெல்ப் பண்ண முடியறதான்னு பாப்பேன்”

நான் சிரித்தேன்.

“சிரிக்காதீரும் ஓய். குழம்பு வைக்கிறவன், குழப்பி விட்டுடுவான்னு நினைக்க வேண்டாம். நம்ம கிட்டே ரசமான யோசனைகளும் கிடைக்கும். பச்சடி மாதிரி புளிச்சிப்போன ஐடியாக்களை யூஸ் பண்ணிண்டு இருக்காம, கசப்பா இருந்தாலும் புதுசா ட்ரை பண்ணுங்க. கடைசீலே பாயசமா இனிக்கும்”

இவரை வாயை மூட வைக்க வேண்டுமென்றால் இரண்டு ஜார்கன்களை எடுத்து விடுவதுதான் வழி.

“பிராசஸ் கேப்பபிளிட்டி ன்னா தெரியுமா?”

“ஓரளவு தெரியும்”

என்ன ஓரளவு என்று கேட்கவில்லை. வாயை அடைக்க அது வழியில்லை.

“கிராஸ் பங்க்ஷனல் டீம் ன்னா தெரியுமா?”

“அதுவும் ஓரளவு தெரியும்”

இதற்கு அப்புறம் என்னால் சும்மா இருக்க முடியவில்லை.

“இந்த ரெண்டையும் பத்தி உமக்குத் தெரிஞ்சதை சொல்லும். அப்புறமா பிரச்சினை என்னன்னு சொல்றேன்”

நாராயணய்யர் உற்சாகமானார். வெற்றிலையை புளிச் என்று துப்பி விட்டு வந்து சம்பிரமாக உட்கார்ந்தார்.

“டீம் ஒர்க்கிங்கறதே ஒரு பிராசஸ் தானே?”

“ஆமாம்”

“ஒவ்வொரு டீமுக்கும் ஒரு வேலை இருக்கு. அந்த வேலையை சரியாப் பண்ணி முடிக்கிறதுதானே பிராசஸ் கேப்பபிளிட்டி?”

“நிஜம்தான்”

“தண்ணி, புளி, உப்பு, மிளகாய் தூள் இதைச் சேத்தா ரசம் வருது. இதுலே நாம சொன்ன பொருள் எல்லாம் டீம் மெம்பர்ஸ் மாதிரி.”

எனக்கு இப்போது கொஞ்சம் சுவாரஸ்யம் பிறந்தது.

“ரசம் தண்ணி மாதிரியோ, புளி மாதிரியோ, மிளகாய் மாதிரியோ அல்லது உப்பு மாதிரியோ இருக்கிறதில்லை. இது எல்லாம் சேர்ந்த ஒரு எபெக்ட் தான் ரசம். ஆனா இதிலே எந்த ஒரு பொருள் தூக்கலாப் போனாலும் ரசம் டேஸ்ட்டுக்கு பதில் அந்தப் பொருளோட டேஸ்ட்தான் வரும்.”

எங்கே வருகிறார் இவர்?

“எல்லாரும்தான் ரசம் வைக்கறா. நானும் வைக்கறேன். என் ரசத்தை ஏன் எல்லாரும் பாராட்டரா? எதை எவ்வளவு சேர்க்கணும்ன்னு எனக்குத்தான் தெரியும். நான்னா யாரு? டீம் லீடர். அது அது அளவோட இருந்தா இன்டராக்ஷன் நல்லா இருக்கும். ஒரு டீமுக்கு திறமையான ஆட்கள் மட்டும் போதாது இன்டராக்ஷன் வேணும். அளவுக்கு அதிகமா ஒரு ஆள் டாமினேட் பண்ணா இன்டராக்ஷன் பணால்.”

என் முகம் மாறுவதைப் பார்த்து,

“என்னண்ணா, நான் சொல்றதிலே ஏதாவது சென்ஸ் இருக்கா?” என்றார் ஆவலாக.

“என் பிரச்சினைக்குத் தீர்வே கிடைச்சாச்சு. உமக்கு டெமிங் அவார்டே தரலாம் ஓய்”

19 comments

  1. //‘அடு மடையா’ என்று சமையல்காரனை சுட்டுவது போல ஒரு வரி நள வெண்பாவில் வரும்.(நம்பி சார், முழு செய்யுள் தெரிந்தால் சொல்லுங்களேன்)//

    ஒரு நாற்பது, நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நீங்கள் கேட்டிருந்தால் நூலுதவி இல்லாமலே சொல்லியிருப்பேன். அப்போது நளவெண்பாவின் எல்லாப் பாடல்களும் மனப்பாடம். (அடிக்கடி நீங்கள் என் பழைய நினைவுகளைக் கிளறுகிறீர்கள் ஐயா.)

    நெஞ்சால்இம் மாற்றம் நினைந்துரைக்க நீஅல்லால்
    அஞ்சாரோ மன்னர் அடுமடையா – எஞ்சாது
    தீமையே கொண்ட சிறுதொழிலாய் எங்கோமான்
    வாய்மையே கண்டாய் வலி. (394)

    நாராயண அய்யரிடம் இனிப் பேசும்போது சற்றுக் கவனமாகவே பேசுங்கள்; அவரிடம் எவ்வளவு `சரக்கு’ இருக்கிறது என்று ஊகிக்க முடியவில்லை.

    மிகவும் பொருத்தமான தலைப்பு.

  2. //என்ன ஓரளவு என்று கேட்கவில்லை. வாயை அடைக்க அது வழியில்லை.//

    இப்படி போகிறபோக்கில் வந்து விழும் அசத்தலான பிரயோகங்கள்தான் உங்களிடம் நான் மிக அதிகம் ரசிப்பது. வாழ்த்துகள் & பாராட்டுகள்!

    தொடர்ந்து இதே குறும்பு, லயத்துடன் விடாமல் எழுதிவாங்க, பெரிய லெவல் காத்திருக்கு 🙂

    – என். சொக்கன்,
    பெங்களூர்.

  3. இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் உங்கள் பதிவை ‘சமையல்’ பகுதியில் தமிழ்மணம் வெளியிட்டிருந்ததே அதான். இதுவும் processing capability யில் ஒருவகையோ

    1. நான் கூட அதை ரசித்தேன். சமைக்கிறவர்களின் பெருமையைத்தானே எழுதியிருக்கிறேன், அவர்கள் படித்துப் பெருமைப்படட்டுமே!

  4. Dear Sir,

    Past several weeks, I am reading your blogs, very interesting, informative & entertaining.

    Regarding the latest மடையன் என்றால் மேதாவி, during my college days (S P Jain Center Of Management)….they explained this with 20 pages case study……you made it very simple….!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!